பாஜக ஆட்சியின் சவப்பெட்டிக்கு மக்கள் ஆணி அடிப்பதற்குள்! அந்த பணியை அமலாக்கத்துறையே செய்கிறது! கே.எஸ்.அழகிரி.!

By vinoth kumar  |  First Published Jul 18, 2023, 9:15 AM IST

எதிர்கட்சிகளுடைய ஒற்றுமையைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., அமலாக்கத்துறையோடு கூட்டணி அமைத்து அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர கூவி கூவி அழைத்தாலும் எந்த அரசியல் கட்சியும் சேர முன்வரவில்லை. 


தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எக்கு கோட்டை போல் உறுதியாக இருக்கிறது. அமலாக்கத்துறையின் மூலம் எத்தகைய சோதனைகள், கைதுகள், சொத்துகளை முடக்கினாலும் அதற்கெல்லாம் எவரும் அஞ்சப் போவதில்லை என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி அவர்களுடைய வீடு உள்ளிட்ட அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். 2006 முதல் 2011 வரை கனிம வளத்துறை அமைச்சராக இருந்த போது, செம்மண் அள்ளுவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அன்றைய அ.தி.மு.க. அரசால் 2011 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், அ.தி.மு.க. ஆட்சி தொடுத்த சொத்து குவிப்பு, நில அபகரிப்பு வழக்குகளிலிருந்து சமீபத்தில் தான் பொன்முடி விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 12 வருடத்திற்குப் பிறகு மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் புதிதாக வழக்கு பதிவு, விசாரணை என்ற போர்வையில் அவரது வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. 

Latest Videos

undefined

சமீபத்தில் நடைபெற்ற ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கொங்கு மண்டலத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றதற்கு கடுமையாக உழைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை பழிவாங்கும் நோக்கோடு, அவர் மீது ஒன்றிய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டு, கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜி அவர்களை அமலாக்கத்துறையினர் ஈவு இரக்கமில்லாமல் விசாரணை நடத்துவதாகக் கூறி கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தப் பின்னணியில் தான் தற்போது அமைச்சர் பொன்முடி மீது குறிவைத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. 

இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளை பிளவுபடுத்துவதற்கும், பழிவாங்குவதற்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை பா.ஜ.க. 95 சதவிகிதம் பயன்படுத்தி வருகிறது. தற்போது, மற்ற துறைகளை விட அமலாக்கத்துறையின் மூலம் எதிர்கட்சிகளை பழிவாங்குவதில் பல புதிய உத்திகள் கையாளப்பட்டு வருகிறது. இதற்கு 2019 இல்  சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் செய்த திருத்தத்தை பயன்படுத்துகிறது. இச்சட்டத்தை பயன்படுத்தி எவர்மீதும் வழக்கு தொடுத்து, கைது, சோதனை, பறிமுதல், சொத்துகளை முடக்குதல், நீண்டகாலத்திற்கு ஜாமினில் வெளியே வராமல் தடுப்பது போன்றவற்றின் மூலம் கடும் தொல்லைகளை தருகிற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். 

இதற்கு அஞ்சி தான் அமலாக்கத்துறையின் விசாரணையிலிருந்து விடுபடுவதற்காகவே சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷின்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்த அஜித் பவார் போன்றவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. கூட்டணி அரசில் சேர்ந்து தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரும், வாரியத் தலைவருமான மடல் விருபாஷப்பா மற்றும் அவருடைய மகன்  வீடு மற்றும் அலுவலகங்களில் கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவைச் சேர்ந்த காவல்துறையினர் சோதனை செய்த போது கான்ட்ராக்டர்கள் ரூபாய் 6.72 கோடி லஞ்சம் கொடுத்ததை ககையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆனால், அவர்கள்மீது இதுவரை அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? 

அமலாக்கத்துறை கடந்த 2014 முதல் 2022 வரை 3010 சோதனைகளை நடத்தி, வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஆனால், 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் வெறும் 112 சோதனைகள் தான் நடைபெற்றன. பா.ஜ.க. ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் வெறும் 23 பேர் தான் தண்டனை பெற்றிருக்கிறார்கள். இத்தகைய வழக்குகளின் மூலம் எதிர்கட்சிகளை பழிவாங்குவதற்கு தான் அமலாக்கத்துறை ஏவிவிடப்படுகிறதே தவிர, குற்றவாளிகளை தண்டிப்பதற்காக அல்ல. அமலாக்கத்துறையினால் வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன் புனிதர்களாக மாறி விடுகிறார்கள். இதற்கு பா.ஜ.க. சலவை எந்திரமாக செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே, பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் மாநாட்டில் 17 கட்சிகள் பங்கேற்றன. இன்றைக்கு 25 கட்சிகள் பெங்களுரில் கூடியிருக்கின்றன. எதிர்கட்சிகளுடைய ஒற்றுமையைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., அமலாக்கத்துறையோடு கூட்டணி அமைத்து அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர கூவி கூவி அழைத்தாலும் எந்த அரசியல் கட்சியும் சேர முன்வரவில்லை. இதே நிலை நீடித்தால், 37 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று ஆட்சி செய்து வருகிற பா.ஜ.க., எதிர்கட்சிகளின் ஒற்றுமை காரணமாக 2024 தேர்தலில் நிச்சயம் ஆட்சியிலிருந்து அகற்றப்படும் என்பது உறுதியாகி வருகிறது. 

எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எக்கு கோட்டை போல் உறுதியாக இருக்கிறது. அமலாக்கத்துறையின் மூலம் எத்தகைய சோதனைகள், கைதுகள், சொத்துகளை முடக்கினாலும் அதற்கெல்லாம் எவரும் அஞ்சப் போவதில்லை. கைதுகளும், சோதனைகளும் நடக்க நடக்க பா.ஜ.க.வினுடைய தோல்வி உறுதி செய்யப்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியின் சவப்பெட்டிக்கு மக்கள் ஆணி அடிப்பதற்கு முன்பாக அந்த பணியை அமலாக்கத்துறையே செய்து வருகிறது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

click me!