அண்ணாமலையின் பிரச்சாரத்திற்கும் அழைக்கவில்லை, அர்ஜூன் சம்பத் படத்தையும் புறக்கணிக்கிறாங்க, எனவே நாகை தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு இல்லையென இந்து மக்கள் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
மரியாதை கொடுக்கவில்லை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்குகளை வேட்டையாடி வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு கட்சிக்கும் சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யும். தமிழகம் முழுவதும் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்களுக்கு அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் பல இடங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்தநிலையில் நாகை தொகுதி பாஜக வேட்பாளர் தங்களை மதிக்கவில்லையென கூறி பாஜக வேட்பாளருக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. நாகை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இந்து மக்கள் கட்சிக்கு எந்தவித மரியாதையும் கொடுக்கவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அர்ஜூன் சம்பத் புகைப்படம் புறக்கணிப்பு
இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட செயற்குழு கூட்டம் நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக வேட்பாளருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் மற்றும் பாஜகவினர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் புகைப்படம், மற்றும் கொடியை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பாராளுமன்ற தேர்தலில் பாஜக- வுக்கு ஆதரவு கிடையாது என்றும், பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளை செய்யமாட்டோம் என்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பாஜகவிற்கு பிரச்சாரம் செய்ய மாட்டோம்
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து மக்கள் கட்சி நாகை மாவட்ட தலைவர் விஜயேந்திரன் கூறுகையில், நாகை தொகுதி பாஜக வேட்பாளர் ரமேசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்றும், நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை புறக்கணிப்போம் என தெரிவித்தார். மேலும் நாகை பகுதியில் அண்ணாமலை பங்கேற்ற பிரச்சார நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லையென என தெரிவித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அவரவர்கள் விருப்பமுள்ள கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்றும் அறிவித்தார்.
இதையும் படியுங்கள்