வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்காகவே அதிமுகவுடன் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்த அன்புமணி, கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டா தான் நாங்க இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவருவோம் என அதிமுக அரசு நிர்பந்தம் செய்ததாக கூறினார்
அதிமுக ஆட்சிக்கு உயிர் கொடுத்தது பாமக
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில், வட சென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாமக இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி 2019ஆம் ஆண்டே ஆட்சியை இழந்திருப்பார்.
நாடாளுமன்ற தேர்தலோடு 22 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலில் 9 தொகுதியில் 5 தொகுதி அதிமுக வெற்றி பெற்றது. இந்த 5 தொகுதியும் பாமகவின் கோட்டை. நாங்கள் இல்லையென்றால் அன்றே அதிமுக ஆட்சியில் இழந்திருக்கும். அதிமுக ஆட்சிக்கு உயிர் கொடுத்தது நாங்கள்தான். பாமக துரோகம் செய்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். வன்னியர்களுக்கு 10 .5 % இட ஒதுக்கீடு கொடுத்ததாக கூறுகிறீர்கள்.
கூட்டணி வைத்தால் மட்டுமே இட ஒதுக்கீடு
மனதார 10.5% இட ஒதுக்கீடு கொடுப்பதாக இருந்தால் தேர்தலுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு கொடுத்திருக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டே கூட்டணி வைக்கும் போது 10 அம்ச கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஜாதி வாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு. ஆனால் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை பலமுறை எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தேன். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து நான்கு மாதம் போராட்டமும் நடத்தினோம். அப்போது எல்லாம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று அதிமுகவிற்கு நினைக்கவில்லை.
பிறகு சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் இட ஒதுக்கீடு தருகிறோம் என கூறினார்கள். இதனை ராமதாஸ் அய்யாவும் ஒத்துக் கொண்டார் எங்களுக்கு தேவை இடை ஒதுக்கீடு. இட ஒதுக்கீடுக்காக கூட்டணி கூட வருகிறோம் என்று உறுதி அளித்தோம். தொகுதி கூட அதிகமாக வேண்டாம் என்று தெரிவித்தோம். தேர்தல் தேதி மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது அதற்கு முன்பாக இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை மதியம் ஒரு மணிக்கு அதிமுக தெரிவித்தது. இவ்வளவுதான் சீட்டு கொடுப்போம் கையெழுத்து போடுங்க என நிர்பந்தம் கொடுத்தாங்க. கையெழுத்து போட்டா தான் நாங்க இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்கள்.எவ்வளவு பெரிய துரோகம் செய்தார்கள்.
கன்னித்தீவு போல நீளும் அதிமுகவின் ஊழல் கதை! பழனிசாமியின் குடுமி பாஜக கையில்! மு.க.ஸ்டாலின் பேச்சு
பாஜகவுடன் கூட்டணிக்கு இது தான் காரணம்
அப்போது வெற்று பேப்பரில் கையெழுத்து போடுகிறேன். சீட்டு கூட வேண்டாம் இட ஒதுக்கீடு மட்டும் கொடுக்க சொல் என்று ராமதாஸ் ஐயா கூறினார். ஏதோ இவர்கள்(எடப்பாடி) 10.5% இட ஒதுக்கீடு தூக்கி கொடுத்ததாக கூறுகிறார்கள். அரைகுறையாக இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார்கள். உண்மையாக கொடுத்திருந்தால் முன்பே கொடுத்திருக்க வேண்டும். அல்லது நாங்கள் கேட்காமல் கொடுத்திருக்க வேண்டும்.
அதன் பிறகு இட ஒதுக்கீடு நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. மீண்டும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அதிமுக தரப்பில் இருந்து ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. ஓட்டு மட்டும் வேண்டும், கொடி பிடிக்க வேண்டும், தோள்களில் சுமக்க வேண்டும் ஆனால் இட ஒதுக்கீடு மட்டும் கொடுக்க மாட்டீர்கள். இதன் காரணமாகத்தான் பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்தினோம். பாமக எடுத்த முடிவு மிக முக்கியமான முடிவு என அன்புமணி தெரிவித்தார்.