சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து தான் திமுக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என தெரிவித்த ஜெயக்குமார், மத்திய அரசில் அங்கம் வகித்த போது கச்சத்தீவை மீட்க அனைத்து வாய்ப்பும் இருந்தும் திமுக அதனை செய்யவில்லையென ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். .
திமுகவிற்கு மக்கள் எதிர்ப்பு
வட சென்னை அஇஅதிமுக வேட்பாளர் இராயபுரம் மனோ வை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இராயபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அஇஅதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தார். வட சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினரை யாரும் பார்த்ததுக்கூட கிடையாது என்று கூறிய அவர், திமுக வாக்கு சேகரிக்க செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.
பால்விலை, மின்சார கட்டணம் உயர்வு,சொத்துவரி உள்ளிட்ட அனைத்திலும் விலையை உயர்ந்துள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார். அத்தியாவசிய விலை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டினார். நாள் தோறும் கொலைகளை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
10 ஆண்டுகள் வாய் திறக்காதது ஏன்.?
கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்த்து காங்கிரஸ் கொடுக்கும் போது , சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து அப்போது ஆட்சியில் இருந்த திமுக அதை கண்டிக்காமல் அமைதியாக இருந்ததாக கூறினார். மத்திய அரசில் அங்கம் வகித்த போதும், கச்சத்தீவை மீட்க வாய்ப்பிருந்தும் திமுக அதனை செய்யவில்லை என கூறிய அவர், தற்போதும் கச்சத்தீவை மீட்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது போலியான வாக்குறுதி எனவும், மக்கள் இனியும் திமுகவை நம்ப தயாராக இல்லை என தெரிவித்தார்.
10 ஆண்டுகளாக பிரதமராக உள்ள மோடி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட போது ஒருமுறை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை என கூறிய ஜெயக்குமார், பிரதமர் 10 ஆண்டுகளாக வாய் திறக்காமல் தற்போது தேர்தலுக்காக கட்சத்தீவு குறித்து பேசுவதாகவும் ஜெயக்குமார் விமர்சித்தார்.