திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமூக வலை தளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசு மீது மாஜி அமைச்சர் கணவர் புகார்
திமுக அரசு பதவியேற்று சுமார் 15 மாதங்கள் கடந்த நிலையில், திமுக அரசின் செயல்பாடுகளை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு திமுக பதிலடி கொடுத்து வரும் நிலையில் திமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவன் ஜெகதீசன் தான் தற்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதிமுகவில் 1977 ஆம் ஆண்டு சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன், சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் திமுகவில் சேர்ந்த அவர், 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அப்போது மாநில சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தற்போது திமுகவின் முக்கிய பதவியான துணை பொதுச்செயலாளராக சுப்புலட்சுமி உள்ளார்.
ஜெயலலிதா வீட்டு திருமணம்
சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தீவிர ஆதரவாளர், கட்சியின் எந்தநிலையில் உள்ளவர்களையும் விமர்சிப்பது அவரது வழக்கம் அந்தவகையில், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமண நிகழ்வு மிக பிரம்மாண்டமாக மதுரையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வை விமர்சித்து ஒருவர் எழுதிய கட்டுரையை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதா வீட்டு திருமணத்தைப் போல மதுரையில் நடந்த அமைச்சர் மூர்த்தி வீட்டுத் திருமணம்! பல்லாயிரம் ஆடுகளை வெட்டி, கோழிகளை அடித்து போட்டு பணம் எண்ணும் மெஷின்களை வரிசையாக வைத்து மொய் வசூல் செய்து நடத்துகிற திருமணம் எல்லாம் திராவிட மாடலா..? இந்தத் திருமணத்தில் முதல்வர் கலந்து கொண்டு இது 'பிரம்மாண்டம்' என்று புகழ்வதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் ஒன்று சேர்வதா...? வாய்ப்பே இல்லை... கானல் நீரை போல் கரைந்து போய்விடுவிங்க- இபிஎஸ் ஆவேசம்
திமுகவை கைப்பற்ற முயன்ற வைகோ
இதே போல மற்றொரு பதிவில், 1993 திமுக விலிருந்து கலைஞரையே வெளியேற்றி விட்டு திமுகவை கைப்பற்றும், உருவாக்கும் முயற்சியில் பணக்காரப் பயல்களோடு சேர்ந்து கொண்டு கோபாலசாமி கொக்கரித்த காலத்தில் கலைஞர் பட்ட பாட்டை , மன உளைச்சலை , உற்ற வேதனையை அருகிருந்து கண்டவர் நாங்கள் ! அந்த நிகழ்வுகள் 30 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம் எங்களுக்கு ! பேசிய பேச்சுக்கள் , ஏசிய வசவுகள் , சீண்டிய கிண்டல்கள் , செய்த அவமதிப்புக்கள் , ஏகடியங்கள் கணக்கில் அடங்காதவை ! ஆட்சியில் அமர்ந்துள்ளோருக்கு அது மறந்திருக்கலாம் . அவர் தம் அணுகுமுறை வேறு .நாங்கள் ஏற்பதற்கில்லை சுய மரியாதை எமக்கு கொஞ்சம் உண்டு என விமர்சித்துள்ளார்.
லஞ்சம் இல்லாத துறை எது..?
இதை விட ஒருபடி மேலாக சென்று லஞ்சம் இல்லாத தமிழக அரசின் ஒரு துறையை சொன்னா ஒரு கோடி பரிசு என பதிவிட்டுள்ளார். இது போன்ற பதிவுகளால் திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திமுகவினரே திமுகவை விமர்சிப்பது எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என கூறிவருகின்றனர். திமுக மூத்த நிர்வாகியான சுப்புலட்சுமியோ தனது கணவரின் விமர்சனத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்