செம்மண் குவாரி தொடர்பாக, அமைச்சர் பொன்முடி மீது 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமலாக்த்துறை சோதனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை கடுமையாக தெரிவித்திருந்தார். மத்திய பாஜக அரசின் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என தெரிவித்தவர், நாங்க திருப்பி கொடுத்தா தாங்க மாட்டீங்கனு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் திமுகவிற்கு அடுத்து செக் வைக்கும் வகையில் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் பொன்முடியின் செந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது. அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு,சென்னையில் எழும்பூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட 5 இடங்கள் மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியின், கனிமவள அமைச்சராக இருந்த பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் விதிமுறைகளுக்கு மாறாக தனது மகனுக்கே குவாரி ஒப்பந்தம் வழங்கியதாகவும், குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது.
இதனால் அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கானது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சுமார் 11ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் அமலாகத்துறை விசாரணை நடத்தி வருகிறது.