இதெல்லாம் வெட்கக்கேடு.. மக்களை விட டாஸ்மாக் வருமானதா முக்கியமா போச்சா.. ஆளுங்கட்சியை அலறவிடும் சீமான்.!

By vinoth kumar  |  First Published Sep 6, 2023, 6:34 AM IST

சொந்த இரத்த உறவுகள் கூட சிறு சிறு முன்பகைக்காக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாகும் சமூகப்பேரவலம் நிகழ்வதற்கு அரசு விற்கும் மதுதான் அடிப்படை காரணமாகிறது. 


அரசு மது விற்பனையை தடைசெய்தாலே தமிழ்நாட்டில் நடைபெறும் 95% கொடுங்குற்றங்கள் நடைபெறாமலேயே தடுத்து நிறுத்த முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் என சீமான் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் தோட்டத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார், மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பவதி ஆகிய நால்வரை, போதை கும்பல் வெட்டி படிகொலை செய்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான தமிழ்க்குடும்பங்களின் அழிவுக்குக் காரணமாக உள்ள மதுவினை தடைசெய்யாமல் வேடிக்கைப்பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கே இப்படுகொலைகளுக்கு முழுமுதற் காரணமாகும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைக் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- விஜயலட்சுமி புகார் குறித்து என் பொண்டாட்டியோ என் குடும்பமோ கவலைப்படல.. அசராத சீமான்..!

தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மலிவுவிலை மதுக்கடைகளால் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் வேகமாகப் பெருகி வருகின்றன. சொந்த இரத்த உறவுகள் கூட சிறு சிறு முன்பகைக்காக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாகும் சமூகப்பேரவலம் நிகழ்வதற்கு அரசு விற்கும் மதுதான் அடிப்படை காரணமாகிறது. அதுமட்டுமின்றி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காத அளவிற்கு வளர்ந்து கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது.

தலைநகர் சென்னையில் நடக்கும் படுகொலைகள் பெரும்பாலும் கஞ்சா போதையில்தான் நடைபெறுகிறது. எனவே அரசு மது விற்பனையை தடைசெய்தாலே தமிழ்நாட்டில் நடைபெறும் 95% கொடுங்குற்றங்கள் நடைபெறாமலேயே தடுத்து நிறுத்த முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த போராடிய திமுக, தமது ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்த மறுப்பது ஏன்? இத்தனை உயிர்கள் பறிபோன பிறகும் திமுக அரசு மதுவிற்பனையைத் தடைசெய்ய மறுத்து அமைதி காப்பது வெட்கக்கேடானது. மக்களின் நலனைவிட அரசின் வருமானம் திராவிட மாடல் அரசிற்கு முதன்மையானதா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதையும் படிங்க;- 6 பேர நான் ஏமாத்திருக்கேன்னா, நீ 7வதா நாமம் போட்டுக்க வந்தியா - சீமானை டார் டாராக கிழித்த விஜயலட்சுமி

ஆகவே, தமிழ்நாடு அரசு சீரழியும் தமிழிளம் தலைமுறையைக் காப்பதற்கு போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் பெருகும் கஞ்சா விற்பனையை முற்று முழுதாக தடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், பல்லடம் படுகொலைகளைச் செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.

click me!