எக்காரணம் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே கூடாது... உச்ச நீதிமன்றத்தில் உறுதியாக நின்ற தமிழக அரசு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 23, 2021, 12:13 PM IST
Highlights

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் கொத்து, கொத்தாக மடியும் அவலம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு, மே 22-ம் தேதி மக்களின் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, ஆக்ஸிஜன் தயாரித்து தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க அனுமதி தருமாறு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது. 

 

இதையும் படிங்க: 'உட்றாதீங்க யப்போ' பாடலின் அடித்து நொறுக்கும் சாதனை..! உற்சாகத்தில் 'கர்ணன்' படக்குழு!

வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “கொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கூடுதலாக ஆக்ஸிஜன் சேமிப்புக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படியும், இதற்காக அனுமதி கோரும் நிறுவனங்களுக்குத் தற்காலிக அனுமதி அளிக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ‘ரிலையன்ஸ் நிறுவனம்’ தனது தொழிற்சாலைகளிலிருந்து திரவ ஆக்ஸிஜன் வழங்கி உதவியது.

அதைப்போல ஆக்ஸிஜன் பற்றாக்குறையுள்ள இந்த நேரத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இலவசமாகவே சப்ளை செய்யக் காத்திருக்கிறோம். இதற்காகாக அனுமதி அளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 1,050 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனுடைய உற்பத்திக்கூடத்தில் தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 500 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனுப்ப தயாராக இருக்கிறோம். அத்துடன் ஆலையைப் பராமரிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கை மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராகி இருந்த மத்திய அரசு வழக்கறிஞர் துசார் மேத்தா கொரோனா விவகாரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆகையால், தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதி தரலாம். நாட்டில் கொரோனா அதிகரித்து ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ளதால் அனுமதி தரலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதனை திறக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 

 

இதையும் படிங்க:  தளபதியை அடுத்து தல அஜித் படத்திற்கும் சிக்கல்... அதிரடி முடிவை ஆலோசித்து வரும் ‘வலிமை’ படக்குழு...!

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, நீங்களே கூட ஸ்டெர்லைட் ஆலையை எடுத்து நடத்துங்கள் என தமிழக அரசுக்கு யோசனை வழங்கினர். ஆனால் அதற்கும் மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, தூத்துக்குடி பகுதி மக்கள் ஆலையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பதிலாக நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள ஆலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும் தமிழக அரசு யோசனை கூறியுள்ளது. 

click me!