2 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழக்கப்போகும் அபாயம்... கையறு நிலையில் மருத்துவர்கள்; உறவினர்கள் கண் முன்னே மரணம்

By Thiraviaraj RMFirst Published Apr 23, 2021, 12:01 PM IST
Highlights

கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்ட 25 பேர் மரணமடைந்தனர். இன்னும் 2 மணி நேரத்துக்குத்தான் ஆக்சிஜன் உள்ளது. 

டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 25 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம் அடைந்துள்ளது. பிரபல மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள், அவசர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளால் மருத்துவர்கள் செய்வதறியாது தவித்து  வருகின்றனர். வெண்டிலேட்டர்களும் திறம்பட செயல்படவில்லை. இந்த மருத்துவமனையில் சுமார் 510 கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்ட 25 பேர் மரணமடைந்தனர். இன்னும் 2 மணி நேரத்துக்குத்தான் ஆக்சிஜன் உள்ளது. வெண்டிலேட்டர்களும் பைபாப் கருவிகளும் சரியாக வேலை செய்யவில்லை. பைபாப் இயந்திரம் நோயாளிகளின் உடலுக்குள் எதுவும் செலுத்தாமலேயே ஆக்சிஜன் அளிப்பதாகும் இதுவும் வேலை செய்யவில்லை” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது மேலும் 60 நோயாளிகள் உயிர் சிக்கலில் உள்ளது, அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது, அரசு தயவு செய்து உதவுங்கள் என அந்த மருத்துவமனை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறை அழுத்த ஆக்சிஜனால்தான் 25 பேர் மரணமடைந்ததாக மருத்துவமனை உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் டெல்லியில் உள்ள மேக்ஸ் ஸ்மார்ட் மருத்துவமனை, மேக்ஸ் ஹாஸ்ப்பிட்டல் சாக்கெட் ஆகிய மருத்துவமனைகளும் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான ஆக்சிஜனே கைவசம் இருப்பதாகக் கூறுகிறது. 700 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர், உதவி தேவை என்று இந்த மருத்துவமனைகளும் அறைகூவல் விடுத்துள்ளன.

டெல்லியில் அரசு மருத்துவமனையில் எமர்ஜென்சி பிரிவின் வாசலில் நோயாளிகள் இறப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளன. ஹரியாணா, உத்தரப் பிரதேசத்திலிருந்து தனியார் ஆக்சிஜனை வரவிடாமல் அந்த மாநில அரசுகள் தடுப்பதாக டெல்லி அரசு குற்றம்சாட்டி வருகிறது.

click me!