ஒரே ஒரு கடிதாசிதான்… கேரள மாநில அரசியலையே உலுக்கிய முதல்வர் ஸ்டாலின்…!

By manimegalai aFirst Published Nov 8, 2021, 7:23 PM IST
Highlights

நன்றி தெரிவித்து கேரள முதலமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் அம்மாநில அரசியல் நிலைமையை புரட்டி போட ஆரம்பித்துள்ளது.

திருவனந்தபுரம்: நன்றி தெரிவித்து கேரள முதலமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் அம்மாநில அரசியல் நிலைமையை புரட்டி போட ஆரம்பித்துள்ளது.

அண்டை மாநிலங்களுடன் தமிழகம் நட்புறவை பேண விரும்பினாலும் சிற்சில சமயங்களில் அரசியல் நிகழ்வுகள் அதன் தன்மையை மாற்றிவிடும். இப்போது அப்படிப்பட்ட கள அரசியலை கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தினால் வந்திருக்கிறது.

கர்நாடகாவுடன் காவிரி விவகாரம் என்றால் கேரளாவுடன் முல்லை பெரியாறு அணை விவகாரம். தமிழகத்தின் ஜீவதார பிரச்னைகளில் அண்டை மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் ஆளும் அரசை புரட்டி போடும். ஆனால் இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பினராயி விஜயனுக்கு தேங்கஸ் சொல்ல போக… அம்மாநில சட்டசபையில் இன்று இந்த விவகாரம் பெரும் பிரளயமாக வெடித்து இருக்கிறது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டில் இன்னமும் வழக்கு நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கேரள அரசின் முக்கிய நிலைப்பாடுகளின் ஒன்று தான் பேபி அணை பகுதியில் மரங்களை வெட்ட முடியாது என்பது.

ஆனால் அணை பகுதியில் மரங்கள் வெட்ட அனுமதி அளிக்கப்பட்டதற்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் கேரள அரசுக்கு நன்றி கடிதம் எழுதிய பின்னர் விவகாரம் வேறு தளத்துக்கு சென்றிருக்கிறது. அணைக்கு கீழே இருக்கும் 15 மரங்களை வெட்ட கேரள வனத்துறை ஓகே சொல்லி அனுமதி வழங்கி உள்ளது.

இந்த அனுமதி முதலமைச்சருக்கு(அதாவது பினராயி விஜயனுக்கு) தெரியாமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்று ஒரு பேச்சு கேரளாவில் நேற்று முதல் பேசப்பட்டு வருகிறது. ஸ்டாலின் நன்றி சொன்ன பிறகு தான் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக கேரள வனத்துறை அமைச்சர் சுசிந்திரன் கூறி இருக்கிறார்.

அதே சூட்டோடு சூட்டாக இன்று கேரள சட்டசபையில் உக்கிரமாய் எழுந்தது. கேரளா காங்கிரஸ் எம்எல்ஏவான திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் ஒத்தி வைப்பு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். இதற்கு அளித்த பதிலில் வனத்துறை எடுத்த முடிவு தங்களுக்கு தெரியாது என்றும் தெரியவந்ததும் நடவடிக்கையை ரத்து செய்தோம் என்று பதிலளித்து இருக்கிறார்.

வரும் 11ம் தேதி முல்லை பெரியாறு அணை வழக்கு மீண்டும் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் எதற்கு இப்படிப்பட்ட அனுமதி என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

வனத்துறை அதிகாரிகள் எடுத்த முடிவு அந்த இலாகாவை கையில் வைத்துள்ள அமைச்சருக்கும், மாநிலத்தின் முதலமைச்சருக்கும் தெரியவில்லை என்று குற்றம்சாட்டி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் இன்று வெளிநடப்பும் செய்தன.

இப்படிப்பட்ட சூழலில் தான் மரங்கள் வெட்ட அனுமதி அளித்த விவகாரம் குறித்து நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று கேரள எதிர்க்கட்சிகள் ஒரே சேர குரல் கொடுத்துள்ளன. இது அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பெரும் பின்னடைவையும் சிக்கலையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் இத்தோடு முடியாது என்பதே கேரள அரசியலின் தற்போதைய நிலைமை….!

click me!