
கார்த்தி சிதம்பரம்
இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. பஞ்சாபில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத்தர, டி.எஸ்.பி.எல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, டெல்லி, மும்பை, ஒடிசாவில் உள்ள 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அந்த சோதனையின்போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது. ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில் கூறினார். இதற்கிடையே சென்னை கோடம்பாக்கத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம் 10 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடந்தது. அன்று மாலை அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார். விசா நடைமுறையில் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட நான் உதவவில்லை.
சிபிஐ தன் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். சிபிஐ சம்மனை ஏற்று கார்த்தி சிதம்பரம் நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார். நேற்று காலை 8 மணிக்கு கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு ஆஜராக சென்றார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏராளமான கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள்.
சீனா விசா முறைகேடு
குறிப்பாக பஞ்சாப் மின்நிலைய கட்டுமான பணிக்கு சீனர்களை அழைத்து வர விசா வழங்கியதற்கான ஆதாரங்களை காட்டியும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் ரூ.50 லட்சம் பணம் கைமாறியது தொடர்பான இ-மெயில் ஆதாரங்களையும் சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் காண்பித்து கேள்விகள் கேட்டதாக கூறப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நீடிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கார்த்தி சிதம்பரம் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். தற்போது விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது 3-வது வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் அடுத்தடுத்து ப.சிதம்பரத்துக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ‘பொய் வழக்குப் போட்டு தனது குரலை ஒடுக்க சிபிஐ முயற்சிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தன்னையும், தனது குடும்பத்தையும் விசாரணை அமைப்புகள் குறிவைக்கின்றன. நாடாளுமன்ற நிலைக்குழு சம்பந்தமான குறிப்புகளை சிபிஐ சோதனையின்போது கைப்பற்றி விட்டது. நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ கடுமையாக மீறிவிட்டது. சிபிஐ நடவடிக்கை தனது நாடாளுமன்ற செயல்பாடுகளில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது . இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!
இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!