மாநிலங்களவை தேர்தலில் ஆதரவாளருக்கு சீட்டு.. அதிமுகவில் செல்வாக்கை நிரூபித்து கெத்துகாட்டும் ஓபிஎஸ்.!

By Asianet TamilFirst Published May 27, 2022, 8:38 AM IST
Highlights

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தர்மருக்கான வாய்ப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக்கொடுத்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2017-ஆம் ஆண்டில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் போன்ற பதவிகள் ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்தன. ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி; கட்சிக்கு ஓ. பன்னீர்செல்வம் என்று தாங்களாகவே எல்லைக் கோட்டை வகுத்துக்கொண்டனர். ஆனாலும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வத்தால் தனித்து செயல்பட முடியவில்லை என்றே கூறப்பட்டது. கட்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதிக்கம் இருப்பதாகவே பொதுவான தோற்றம் இருந்தது. இந்நிலையில்தான் மாநிலங்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களை அறிவிப்பதில் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் இணைந்து செயல்பட்டாலும் ஆளுக்கு ஓரிடம் என்ற வகையில்தான் பிரித்துக்கொண்டனர்.

இந்த இரு இடங்களைப் பிடிக்க மாஜி அமைச்சர்கள், மாஜி எம்.பி.க்கள், மாஜி எம்.எல்.ஏ.க்கள், அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் என்று பலரும் முட்டி மோதினார்கள். எடப்பாடி பழனிச்சாமி தனக்குரிய சீட்டைத்தான் தனக்கு நெருக்கமான மாஜி அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு வழங்கினார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய பங்கை யாருக்கு வைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சென்னையைச் சேர்ந்த ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான ஜெ. சி.டி, பிரபாகரன், மாஜி அமைச்சர் செம்மலை போன்றவர்கள் சீட்டைப் பெற முயன்றனர். ஆனால், ஓபிஎஸ் தென் மாவட்டத்துக்கு இடத்தை உறுதி செய்ததோடு, பெரிய அளவில் அறிமுகம் இல்லாத முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய செயலாளர் தர்மருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளதாக அதிமுகவில் பேசப்படுகிறது.  

தர்மர் ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என்கிறார்கள் அதிமுகவில். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுப்பட்டபோதும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இரு அணிகளாக இருந்தபோதும் தர்மர் ஓபிஎஸ் பக்கம் நின்றார் என்கிறார்கள். கடந்த 2016, 2021 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட தர்மர் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பை அதிமுக தலைமை வழங்கவில்லை. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் தர்மருக்கு அதிமுக  தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. ஓபிஎஸ் மூலமாக இந்த சீட்டு தர்மருக்குக் கிடைத்துள்ளது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்று கருதப்பட்ட நிலையில், அவருடைய ஆதரவாளருக்கு சீட்டைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ். இதன்மூலம் மூலம் கட்சியில் தன்னுடைய செல்வாக்கை ஓபிஎஸ் நிரூபித்துள்ளார் என்ற குரல்கள் அதிமுக வட்டாரங்களில் கேட்க முடிகிறது.

click me!