ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று புளங்காகிதம் அடைந்தது குன்றிய அரசு.. மு.க. ஸ்டாலின் மீது பாஜக சரமாரி அட்டாக்.!

By Asianet TamilFirst Published May 27, 2022, 7:59 AM IST
Highlights

‘ஒன்றிய’ அரசு, ‘ஒன்றிய’ அரசு என்று பலமுறை கூறி புளங்காகிதம் அடைந்தது ‘குன்றிய அரசு’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.

31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டம் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு நேற்று வந்திருந்தார். சென்னை நேரு ஸ்டேடியம் உள் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் திமுகவினரும் பாஜகவினரும் அதிகளவில் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பிரதமர் மோடியையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் வரவேற்றனர். இருவருடைய பெயர்களை உச்சரிக்கும்போதெல்லாம் மாறி மாறி கரவோஷம் செய்தனர். விழாவில் முன்னிலை வகித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

விழாவில் கச்சத்தீவு தொடங்கி, நீட் தேர்வு விலக்கு, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி, இந்திக்கு இணையாக தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் உள்பட பல முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும் திராவிட மாடல், ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர்கள், கூட்டாச்சி தத்துவம் என பலவற்றையும் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘உறவுக்கு கைக்கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்று பேசினார். திராவிட மாடல். ஒன்றிய அரசு போன்ற பதங்களை பாஜகவினர் எதிர்த்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பேச்சு குறித்து பாஜகவினர் கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக அண்ணாமலை ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக செயல்படும் மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணனும் தொடர்ந்து பதிவுகளை  இட்டு வருகிறார். அதில், “பொறுப்புள்ள முதல்வர் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சியில் பொறுப்பற்று பேசுவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? ‘ஒன்றிய’ அரசு, ‘ஒன்றிய’ அரசு என்று பலமுறை கூறி புளங்காகிதம் அடைந்தது ‘குன்றிய அரசு’. அப்போது கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு இப்போது அதை மீட்க வேண்டும் என கூக்குரலிடுவதுதான் திராவிட மாடலா? குடியைக் கொடுத்து, குடியைக் கெடுத்துதான் திராவிட மாடலா?” என்று கேள்வி எழுப்பி நாராயணன் திருப்பதி பதிவுகளை இட்டுள்ளார். 

click me!