அசுவமேத யாகமும், அமித்ஷா மோடியும்: யெச்சூரி சொன்ன கலகல இதிகாசம்...

First Published Oct 30, 2017, 7:39 PM IST
Highlights
Sitaram Yechury said idhikasa for Modi and Amit Shah


சீதாராம் யெச்சூரி மிகச்சிறந்த பார்லிமெண்டேரியன். சமகால காம்ரேடுகளில் கவனிக்கத்தக்க தலைவர். பா.ஜ.க.வுக்கு எதிராக ‘வெள்ளை குதிரையை தடுத்து நிறுத்துவோம்’ என்று அவர் கையாண்டிருக்கும் சொற்றொடர் நடுவண் அரசுக்கு எதிரான எதிர்கட்சிகள் மத்தியில் புது பலத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மா.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காரல்மார்க்ஸின் 200-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருப்பூரில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி பா.ஜ.க.வை ஜனரஞ்சகமாக வறுத்தெடுத்தார். 

அப்போது “பா.ஜ.க.வின் பாதையை உறுதியாக எதிர்த்து நிற்கும் சக்தி இந்த கம்யூன்ஸ்டிடம் இருக்கிறது. இதை மேலும் வீரியமாக்கும் வண்ணம் அரசியல் ரீதியாக அணி திரட்டிடவும் நாங்கள் தயாராகி வருகிறோம்.

ராமாயணத்தில் அசுவமேத யாகம் எனும் ஒன்றை நடத்தி ராஜ்ஜிய எல்லைகளை விரிவு படுத்தும் உத்தி கையாளப்பட்டது. அதன்படி அரசின் வெள்ளை குதிரை ஓடும் பகுதியெல்லாம், அரசரின் ஆளுகைக்குள் வந்துவிடும். இது ஏழை நிலம், இது செல்வந்தனின் சொத்து என்று எந்த பேதமு பார்க்காமல் குதிரை தன் இஷ்டத்துக்கு ஓடும். ஆனால் அதை யாரும் தடுக்க மாட்டார்கள், தடுக்கவும் முடியாது. காரணம் அப்படி செய்தால் அது அரசுக்கு எதிரான குற்றமாகிவிடும். 

மோடியும், அமித்ஷாவும் வெள்ளை குதிரையை இந்தியா முழுவதும் ஓடவிட்டுள்ளனர். இந்த தேசத்தை பா.ஜ.க.வின் ஆளுகைக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். 
ஆனால் ராமாயணத்தில் ராமனின் வெள்ளைக்குதிரையை அவரது புத்திரர்களான லவா, குசா எனும்  இரட்டை சிறார்கள் எதிர்த்து நின்று தடுத்து நிறுத்தினர். அது போல் மோடியும், அமித்ஷாவும் அவிழ்த்துவிட்டுள்ள வெள்ளை குதிரையை சுத்தியல், அரிவாள் எனும் இரட்டையர்கள் நிச்சயம் தடுத்து நிறுத்துவார்கள்.” என்று முடிக்க, மாஸ் கரவொலி.

வர்ரே வாவ்! திராவிட கட்சிகளின் பேச்சாளர்கள் போல காம்ரேடுகளும் ஜனரஞ்சகமாக பேச கற்றுக் கொண்டார்களே? என்கிறீர்களா.... காலத்தின் கோலம் அப்படி.
 

click me!