உச்ச நீதிமன்றத்தில் என் மீதுதொடுக்கப்பட்ட வழக்கை எதிர்கொள்ள நான் தயார். வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல்
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழக ஆளுநரிடம் புகார் தெரிவித்து,வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். டாஸ்மாக் நிறுவனத்தில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையோடு நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்தார். தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பாக களத்துக்கு வரக்கூடிய தலைவர் ஒருவர், ஆளுநரைச் சந்திந்து டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் சீட்டுக்காக புகார்
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றவர்கள், தேர்தலில் போட்டியிட கூட்டணியில் ஒரு இடமாவது பெற்றுவிட மாட்டோமா என்பதற்காக, அரசின் மீது இதுபோன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக விமர்சித்தார். டாஸ்மாக் நிறுவனத்தில் 2 ஆண்டு மொத்த விற்பனையே ரூ.93 ஆயிரம் கோடி என்ற நிலை தான் உள்ளது. அதாவது ஆண்டுக்கு சாராசரியாக ரூ.45 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடைபெற்றிருக்கும் நிலையில், ரூ.1 லட்சம் கோடி ஊழல் எப்படி நடைபெறும்? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மது விலக்கு கொண்டு வர வேண்டும் அரசியல் கட்சிகள் வலியுறுத்துவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் மதுபானக் கடைகளை குறைக்கும் வகையில் 500 கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் நடந்து வருகிறது.
வழக்கை சந்திக்க தயார்
இதுமட்டுமல்லாமல், அறிவிப்பு வெளியிடாமலேயே 96 மதுபானக் கடைகள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் மதுபானங்களை அதிக விலைக்கு விற்ற கடை எண்ணை குறிப்பிட்டு பொதுமக்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், இதுவரை 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.5.5கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் என் மீது தொடுக்கப்பட்ட வழக்கை எதிர்கொள்ள நான் தயார் எனவும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
இதையும் படியுங்கள்