’வேலுபாய்’ கோட்டைக்குள் புகுந்த செந்தில் பாலாஜி!! ஆடிப்போன எஸ்.பி.வி!!

By Ganesh RamachandranFirst Published Nov 4, 2021, 10:21 AM IST
Highlights

கோவையில் தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோட்டையாகப் பார்க்கப்படும் நிலையில் சுண்டக்காமுத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். ஆனால் தொகுதி எம்.எல்.ஏவான வேலுமணி இதில் கலந்துகொள்ளவில்லை.

பொதுவாக எதிர்கட்சி எம்.எல்.வாக இருந்தாலும், சொந்த தொகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகள், தொடக்க விழாக்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களில் ஆளுங்கட்சி அமைச்சர்களுடன், எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் மேடையில் அமர்வது மரபு-வழக்கம். இந்த வழக்கப்படியே கடந்த அக்டோபர் 28ம் தேதி தொண்டாமுத்தூரில் கட்டப்பட்ட புதிய அரசு கல்லூரியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.pஇ.வேலுமணி பங்கேற்று குத்துவிளக்கேற்றினார்.

ஆனால் இது களத்தில் பணியாற்றும் திமுக தொண்டர்களை அதிருப்தி அடையச்செய்ததாக பேசப்படுகிறது. திமுக அரசு விழாவில் அதிமுகவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது, அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தை திமுக வசம் கொண்டுவரும் முயற்சிகளுக்கு துணைபுரியாது என்ற கருத்துக்கள் திமுகவினர் மத்தியில் எழுந்தன. இந்நிலையில் தான், நேற்றையதினம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் நடைபெற்ற விழா அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் சுண்டக்காமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட ரூ. 1.66 கோடி மதிப்பிலான 2 ஆய்வகங்கள் உட்பட 6 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடங்களை நேரில் பார்வையிட்டு, மாணவர்கள் பயன்பாட்டிற்கு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். கட்டட செயல்பாடுகளை தொடங்கிவைத்ததோடு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, பள்ளியின் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு எஸ்.பி.வேலுமணி உட்பட அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ, எம்.பிக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் வேலுமணி உட்பட அதிமுகவினர் யாரும் இதில் பங்கேற்கவில்லை.

அதிமுக உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் கூட நிகழ்ச்சிக்கு வரவில்லை. முந்தைய நிகழ்ச்சியால் அதிருப்தியில் இருந்த திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலேயே, கொங்கு எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுகவினருக்கு கடும் சவாலாக விளங்கும் செந்தில் பாலாஜி இதில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் செந்தில் பாலாஜி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எஸ்.பி.வேலுமணி விரும்பவில்லை என்றும், தனது கோட்டையான தொண்டாமுத்தூர் பகுதிக்கு செந்தில் பாலாஜி வந்தது அவருக்கு அதிர்ச்சியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 2016ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வென்று ஆட்சியமைக்க கொங்கு தொகுதிகள் தந்த ’கிளீன் ஸ்வீப்’ வெற்றியே காரணம் என்பதும், 2021 தேர்தலில் தோற்றாலும் கணிசமான எம்.எல்.ஏக்களை அதிமுகவிற்கு தந்திருப்பது கொங்கு தொகுதிகளே என்பதும் அனைவரும் அறிந்ததே. இதனால் தான் கொங்கு பகுதியை தன்வசப்படுத்த கூடுதல் கவனத்துடன் காய்நகர்த்தி வருகிறது தி.மு.க.

click me!