தி.மு.க கொள்கைப்படி இந்த ஆண்டும் தீபாவளி வாழ்த்து இல்லை... முதல்வர் தவிர மற்ற தலைவர்கள் வாழ்த்து...

By Ganesh RamachandranFirst Published Nov 4, 2021, 8:45 AM IST
Highlights

தமிழக ஆளுநர், எதிர்கட்சித் தலைவர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தீபாவளி வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து வெளியிடவில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீபஒளி திருநாளாம் தீபாவளி,தீமையை நன்மை வென்றதை நினைவுகூரும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும், நல்லெண்ணத்தையும், சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. இவ்விழா அனைவர் வாழ்விலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும், வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டறிக்கை: அனைத்து மக்களின் வாழ்விலும் இன்பம் பெருகிட எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும். தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் இந்த தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்தி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தூயவழியில் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தீமை மறைந்து நன்மை பெருகும் என்ற நம்பிக்கையோடு ஏழை, எளிய மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல், நாட்டை சூழ்ந்துள்ள தீமைகளை ஒன்றுசேர்ந்து வெல்வோம் என தீபாவளி நன்னாளில் அனைவரும் சபதம் ஏற்போம்.

 

பாமக நிறுவனர் ராமதாஸ்: அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபஒளி திருநாள்வகை செய்யட்டும். தமிழக மக்களுக்கு சமூகநீதி ஒளியால் கிடைக்கும் நல்லின்பம் மட்டுமின்றி அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை,நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை என அனைத்து நன்மைகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்தக் கூடிய தீபாவளியாக இந்த ஆண்டு தீபாவளி அமையட்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம், புதிய வெற்றிப்பாதைகளை உருவாக்கட்டும். அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு பல தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், சமக தலைவர் ஆர்.சரத்குமார், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் முனிருத்தீன் ஷெரீப், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் விஎம்எஸ் முஸ்தபா உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

click me!