அடுத்த எழுந்த சிக்கல்.. மருத்துவப் படிப்புக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்னாகும்.? சட்ட ஆலோசனையில் தமிழக அரசு!

By Asianet TamilFirst Published Nov 3, 2021, 10:21 PM IST
Highlights

இந்த தனி இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் கிரீன் சிக்னல் கிடைத்தால் மட்டுமே, தற்போதைய நிலையில், மருத்துவப் படிப்புக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற முடியும் என்பதே நிதர்சனம்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ள நிலையில், இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஏற்கமவே கல்லூரிகளில் வழங்கப்பட்ட இடங்கள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் விரைவில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளிக்கும்போது, “நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்ட நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று முடிந்தபிறகு மாநில மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும். இதில் 10.5% இட ஒதுக்கீடு குறித்துச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் மா.சு. கூறுகையில், “அனுமதிக்காகக் காத்திருந்த 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 1,450 இடங்கள் இந்த ஆண்டு புதிதாகக் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். 

மேலும் தடுப்பூசி தொடர்பாக கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மா.சு.,“தமிழகத்தில் இதுவரை 5.93 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் 32,260 டெங்கு பரிசோதனைகளைக் கடந்த ஆண்டு செய்யப்பட்டது. தற்போது 1,08,405 பேருக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு வருவது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை. டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் 489 பேர் மட்டுமே டெங்குக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.

10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சட்ட ஆலோசனை நடத்தி வந்தாலும், மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு முன்பே வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான தீர்ப்பு வந்திருப்பதால், அதைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல் கொடுத்தால் மட்டுமே, தற்போதைய நிலையில், மருத்துவப் படிப்புக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற முடியும் என்பதே நிதர்சனம்.

click me!