புரியாதவங்க செஞ்ச வேலை.. ஏதாவது செய்யுங்க.. பாமகவை தொடர்ந்து ஸ்டாலினிடம் ஓடோடிவந்த வேல்முருகன்..!

By Asianet TamilFirst Published Nov 3, 2021, 9:44 PM IST
Highlights

சமூக நீதி குறித்து புரிதலே இல்லாதவர்கள்தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினார்கள்.

வன்னியர் தனி இட ஒதுக்கீடு தடை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக ரத்து செய்தது. இந்த அறிவிப்பால் பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக பாமக குழுவினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்கள். இதேபோல வேல்முருகனும் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 

பின்னர் வேல்முருகன் கூறுகையில், “சமூக நீதி குறித்து புரிதலே இல்லாதவர்கள்தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினார்கள். வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். மேலும் தலைசிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு வாதாடி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் வெற்றிபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின் சமூக நீதியை நிலை நிறுத்த வேண்டும்” என்று வேல்முருகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26 அன்று தமிழக சட்டப்பேரவையில் அன்றைய அதிமுக அரசு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், இந்த அறிவிப்பு, தேர்தலுக்காகவும் பாமகவை அதிமுக கூட்டணியில் தக்கவைக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சர்ச்சையும் எழுப்பப்பட்டது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களை எழுப்பி, அவற்றுக்கு தமிழக அரசுத் தரப்பில் போதிய விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி தனி இட ஒதுக்கீட்டை  நீதிமன்றம் ரத்து செய்தது.

click me!