நம்புங்க…! இந்த நாட்டில் ஒரு லிட்டர் தண்ணீரை விட பெட்ரோல் விலை ரொம்ப ‘சீப்’…!

By manimegalai aFirst Published Nov 3, 2021, 10:37 PM IST
Highlights

உலக நாடுகளில் இந்தியாவை காட்டிலும் குறைவாக அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு லிட்டர் தண்ணீரின் விலையை விட சீப்பாக விற்கப்படுகிறது.

உலக நாடுகளில் இந்தியாவை காட்டிலும் குறைவாக அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு லிட்டர் தண்ணீரின் விலையை விட சீப்பாக விற்கப்படுகிறது.

இந்தியாவில் தீபாவளி வெடியை விட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு வெளியிட்ட வெடிதான் இப்போது பேச்சாக இருக்கிறது.

சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவில் இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை என்ற குரல்கள் தொடர்ந்து பல மாதங்களாக எழுந்து வந்தன. ஆனால் எந்த குரல்களுக்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் போராட்டங்களாக வடிவம் பெற்றன. அப்போதும் தமது காதுகளை மத்திய அரசு திறக்கவே இல்லை. இந் நிலையில் தான் தீபாவளி கிப்ட்டாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்து பட்டாசாக ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் குறைக்கப்படும். மக்களவை மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக தோற்றதால் தான் இந்த மாற்றம், எதிர்க்கட்சிகளின் குரல்களுக்காக அல்ல என்ற ஒரு கருத்தும் அரசியல் திறனாய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது.

சரி… இந்தியாவில் பெட்ரோல், டீசல் ரேட் என்பது இப்போது தெரிந்தாகி விட்டது. உலகின் மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை எவ்வளவாக இருக்கிறது என்று யோசிப்பவர்களுக்காக ஒரு சின்ன அலசல்…..இதோ…!

நம்ப மாட்டீர்கள்… உலகின் சில நாடுகளில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் தண்ணீரை விட விலை குறைவு. ஆச்சரியம் தாங்காதவர்களுக்கு மேலும் ஒரு ஆச்சரியத்தை சொல்லலாம்.

அமெரிக்காவின் அண்டை நாடாக ஒரு நாடு இருக்கிறது. அதன் பெயர் வெனிசுலா. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒன்றரை ரூபாய் தான். அதாவது சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.1.48 காசுகள்.

கம்யூனிஸ்ட் கட்டமைப்பு உள்ள இந்நாட்டில் பெட்ரோல் விலை இவ்வளவு குறைவாக விற்க காரணம் அங்கு கச்சா எண்ணெய் அதிகமான அளவில் கையிருப்பில் உள்ளதுதான்.

ஆனால் நாட்டின் பொருளாதாரமோ அதலபாதாளத்தில் இருக்கிறது. அந்நாட்டின் நாணயம் படு வீழ்ச்சியில் உள்ளது. ஆனாலும், பெட்ரோல் விலை மெகா குறைவு. வெனிசுலாவை விட்டுவிட்டு இப்போது ஈரானுக்கு போனால் அங்கும் ஆச்சரியம். அந்நாட்டில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.4.50க்கு கிடைக்கிறது.

சிரியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 17 ரூபாய். அங்கோலா என்ற நாட்டில் பெட்ரோல் விலை இருபதே ரூபாய். அல்ஜீரியாவில் 25 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை வாங்கிவிடலாம்

குவைத்தில் 26 ரூபாய், நைஜீரியாவில் 30 ரூபாய், துர்கமேனிஸ்தான் நாட்டில் 32 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்கிறது. வறட்சி நாடாக அறியப்படும் எத்தியோப்பியாவில் 34 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. ஹைதி, பஹ்ரெய்ன், பொலிவியா, கத்தார், எகிப்து, அஜர்பைஜான், கொலம்பியா, சவூதி அரேபியா, ஓமன், ஈக்குவடார் ஆகிய நாடுகளில் 50 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தாராளமாக கிடைக்கும்.

அதை எல்லாம் விட இந்தியாவின் அண்டை நாடுகளில் இந்தியாவை விட பெட்ரோல், டீசல் விலை குறைவு தான் என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம். இந்தியாவுடன் அனைத்து அரசியல் மற்றும் விளையாட்டில் மல்லுக்கு நிற்கும் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 54 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இலங்கையில் 68 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வங்கதேசத்தில் ஒரு லிட்டர் 77 ரூபாயாகவும், நேபாளத்தில் 81 ரூபாயாகவும் உள்ளது.

இவை எல்லாம் இந்தியாவை விட பெட்ரோலை குறைவாக விற்கும் நாடுகள். அதிகவிலைக்கு விற்கும் நாடுகள் எவை என்று பார்த்தால் அதன் பட்டியலும் அசர வைக்கிறது. ஹங்கேரி, ஆஸ்திரியா, குரோஷியா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 120 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது.

சிங்கப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 140 ரூபாய். எந்த நாட்டில் உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படுகிறது தெரியுமா…? ஹாங்காங்கில் தான்.. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 200 ரூபாய். இந்த நாடுகளை பார்க்கையில் இந்தியாவில் பெட்ரோல் விலை தேவலாம் தானே…?

click me!