இன்னும் எத்தனை இசுலாமியச் சிறைவாசிகளின் உயிரைப் பலி கொள்ள திமுக அரசு திட்டமிட்டுள்ளது? சிறைவாசிகள், இசுலாமியர் என்பதாலேயே நோய் முற்றும்வரை உரிய சிகிச்சை அளிக்காமலும், விடுப்பு அளிக்காமலும் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்
இஸ்லாமிய சிறைவாசி மரணம்
இஸ்லாமிய சிறைவாசியான அபுதாகிர் உடல் நலன் பாதிக்கப்பட்டு இறந்ததற்கு அதிமுக மற்றும் திமுக அரசே காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்புச்சகோதரர் அபுதாகிர் சிறைக்கொடுமைகளால் உடல் நலிவுற்று உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்துப் பேசியதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக அரசால் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, எனக்கு அபுதாகிரிடம் பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
திமுகவின் பச்சை துரோகம்
அவரது உடல்நிலையைக் கருத்திற்கொள்ளாமல் சிறிதும் இரக்கமின்றி விடுதலை செய்ய மறுத்த திமுக, அதிமுக அரசுகளின் கொடுங்கோன்மை மனப்பான்மையே சகோதரர் அபுதாகிர் மரணத்திற்கான முக்கியக் காரணமாகும். திமுக ஆட்சிக்கு வந்தால் நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்வோம் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதியளித்து, இசுலாமியர்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தை அடைந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இசுலாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்ய மறுத்து, பச்சை துரோகத்தைப் புரிந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு திமுக அரசால் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலை என்ற பெயரில் மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினர் அம்மையார் லீலாவதியைப் படுகொலை செய்த திமுகவினர் உட்பட பலரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அப்போது நீண்டகால இசுலாமியச் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை.
கருணையிலும் மதப்பாகுபாடு
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் கடந்த 2017ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாளினை முன்னிட்டு 1627 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டபோதும் இசுலாமியச் சிறைவாசிகள் எவரையும் விடுதலை செய்யாமல் அதே துரோகத்தைத் தொடர்ந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 2021ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாளினை முன்னிட்டு 700 சிறைவாசிகளை விடுதலை செய்தபோதும் கூட, மீண்டும் நீண்டகால இசுலாமியச் சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்ய மறுத்து கருணையிலும் மதப்பாகுபாடு காட்டி வஞ்சித்தது. கடந்த காலங்களில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபூர் ரகுமான், ரிசுவான் உள்ளிட்ட நால்வர் சிறைவாசிகளாகவே மரணித்த கொடுமைகள் அரங்கேறிய நிலையில், தற்போது சகோதரர் அபுதாகிரும் உயிரிழந்துள்ளது அக்கொடுங்கோன்மை துயரங்களின் நீட்சியும்,
இஸ்லாமியர்களுக்கு திமுக துணை இல்லை
திமுக, அதிமுக கட்சிகள் ஒருபோதும் இசுலாமிய மக்களுக்கு உண்மையான துணையாக இருக்காது என்பதற்கான சாட்சியுமாகும். உரிய காலத்தில் விடுதலை செய்து முறையான மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவர்களது உயிரிழப்பினைத் தடுத்திருக்க முடியும். ஆனால், இரு திராவிட அரசுகளும் பாஜகவின் எதிர்ப்புக்கு பயந்து, சிறிதும் மனச்சான்று இன்றி இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுத்ததன் விளைவே, தற்போது சகோதரர் அபுதாகிர் உயிரும் பறிபோயுள்ளது. இன்னும் எத்தனை இசுலாமியச் சிறைவாசிகளின் உயிரைப் பலி கொள்ள திமுக அரசு திட்டமிட்டுள்ளது? சிறைவாசிகள், இசுலாமியர் என்பதாலேயே நோய் முற்றும்வரை உரிய சிகிச்சை அளிக்காமலும், விடுப்பு அளிக்காமலும் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? மரணம் மட்டும்தான் அவர்களுக்கான முழுமையான விடுதலையைத் தரமுடியும் என்று திமுக அரசு கருதுகிறதா?
10 ஆண்டுகளுக்கு மேல் சிறை- விடுதலை
கடுமையான நோயுற்றவர்களை விடுதலை செய்யலாமென சிறைவிதி பிரிவு 632 கூறும் நிலையில், அதன்படி இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய திமுக அரசிற்கு என்ன தயக்கம்? கருணை அடிப்படையில் விடுதலை என்று கூறிவிட்டு, கருணையில்கூட திமுக அரசு மதப் பாகுபாடு காட்டுவதற்குப் பெயர்தான் 'திராவிட மாடலா’?. திமுக அரசு இனியும் இசுலாமிய மக்களை ஏமாற்றாது, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
ஈரோடு தேர்தலுக்கு திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்.! ஓட்டை இரட்டை இலைக்கு போடுங்கள்- இபிஎஸ்