திராவிட மாடல் ஆட்சியென கூறி அலங்கோல ஆட்சி நடக்கிறது..! திமுக அரசை விளாசும் சசிகலா

By Ajmal Khan  |  First Published Feb 28, 2023, 12:23 PM IST

தமிழ்நாட்டில் பல்வேறு குளறுபடிகளோடு நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை உடனே ரத்து செய்து விட்டு, மீண்டும் இத்தேர்வினை எந்த வித குளறுபடிகளும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையோடு நடத்த சசிகலா தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


குரூப் 2 தேர்வு குளறுபடி

குரூப் 2 தேர்வு குளறுபடி தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு துறைகளில், 'குரூப் 2, 2ஏ' பணிகளுக்காக தற்போது நடைப்பெற்ற தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த தேர்வு எழுதியவர்கள் மிகுந்த அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இந்த ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையாலும், அலட்சியப்போக்காலும் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு துறைகளில், 'குரூப் 2, 2ஏ' பணிகளில் காலியாக உள்ள, 5,446 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாக கடந்த ஆண்டு மே, 21ல் முதல் நிலை தகுதி தேர்வு நடந்தது. இதில் 9 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் கடந்த நவம்பர் மாதம் முடிவுகள் வெளியாகின. இதில் தேர்வான 55,000 பேர்களுக்கு நேற்று குரூப் 2 பிரதான தேர்வு நடைபெற்றது.  இந்த பிரதான தேர்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Latest Videos

ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்.! அதிமுக,பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்த நயினார் நாகேந்திரன்

தேர்வர்கள் பாதிப்பு

பல இடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படம் மற்றும் பதிவெண்ணுடன் கூடிய ஓ.எம்.ஆர், விடைத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இதனால், தேர்வர்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். பல தேர்வர்கள் தங்கள் பதிவெண்களை பார்க்காமல், மாறியிருந்த விடைத்தாளில் விடைகளை அளித்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன, அதன்பிறகு விடைத்தாள் மாறியோருக்கு, மாற்றாக வெற்று விடைத்தாள்கள் வழங்கியும், தேர்வு நடத்தப்பட்டதாக தெரியவருகிறது. மேலும், இந்த குளறுபடிகளால் பிற்பகலில் 2 மணிக்கு துவங்கவேண்டிய தேர்வும் தாமதமாக ஆரம்பித்து, மாலை 5 மணிக்கு முடிய வேண்டிய தேர்வு 6.30 மணி வரை பல இடங்களில் நடைபெற்று இருப்பதாக செய்திகள் வருகின்றன.

நம்பிக்கையை இழந்த தேர்வாணையம்

இது போன்ற குளறுபடிகளால் பல மையங்களில் தேர்வு துவங்கப்பட்டு, இடையில் சிறிது நேரம் தேர்வு எழுதுவது நிறுத்தப்பட்டதாகவும், அந்த நேரத்தில் தேர்வர்கள், தங்களுக்கு கிடைத்த வினாத்தாளில் இருந்த வினாவிற்கான விடைகளை மொபைல் போனில் தேடி பார்த்ததாகவும், மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளதாக தேர்வு எழுதியவர்கள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாக, அரசு வேலை பெற காத்திருக்கும் இளம் சமுதாயத்தினர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்துகின்ற இந்த தேர்வின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் பதவியைக் கூட நிரப்ப முடியாமல், ஒரு பொறுப்பற்ற அரசாகத்தான் இன்றைய திமுக தலைமையிலான அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

முக்கிய தேர்வுகளை முறையாக கையாள தெரியாத திமுக அரசு..! குரூப் 2 தேர்வை ரத்து செய்திடுக- எடப்பாடி பழனிசாமி

அலங்கோல ஆட்சி

 இன்றோ திராவிட மாடல் ஆட்சி என்று மார்தட்டி கொண்டு ஒரு அலங்கோல ஆட்சி நடப்பதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. எனவே, திமுக தலைமையிலான அரசு தற்போது நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை உடனே ரத்து செய்து விட்டு, சரியாக திட்டமிட்டு தேர்வர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் வெளிப்படைத்தன்மையோடு மீண்டும் குரூப் 2, 2ஏ தேர்வை நடத்த வேண்டும் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆட்டுக்குத்தாடியை போல் நாட்டுக்கு கவர்னர்.! ஆளுனர் பதவியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் பாஜக- கி.வீரமணி
 

click me!