Samajwadi : வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்வது தான் சரி..சமாஜ்வாதி எம்பிக்களின் சர்ச்சை பேச்சு !

By Raghupati RFirst Published Dec 18, 2021, 12:53 PM IST
Highlights

பெண்ணின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக மத்திய அரசு உயர்த்தியதற்கு சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இரு எம்பிக்கள் சர்ச்சையான கருத்தை தெரிவித்து இருக்கின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாட்டில் தற்போது ஆணின் திருமண வயது 21ஆகவும், பெண்ணின் திருமண வயது 18ஆகவும் உள்ளது. பெண்களின் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாட்டை உறுதி செய்யும் பொருட்டு அவர்களின் திருமண வயது 21ஆக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் தனது சுதந்திர தின விழா உரையில் தெரிவித்திருந்தார். அதன்படி பெண்ணின் திருமண வயது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க நிதிஆயோக் செயற்குழுவை அமைந்திருந்தது. அந்த குழு தற்போது பெண்ணின் திருமண வயதை 21ஆக அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் இது நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட உள்ளது. பெண்ணின் திருமண வயது உயர்வதையடுத்து குழந்தை திருமணம் தடை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

இதற்கு பொதுமக்கள் முதல் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர் எதிர்த்தும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். சமாஜ்வாதி கட்சிகளை சேர்ந்த இரு எம்பிக்கள் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி சையது டஃபைல் ஹாசன், ‘வயதிற்கு வந்தவுடன் பெண் திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும். பெண்ணிற்கு குழந்தை பிறப்பானது 16 -17 முதல் 30 வயது வரைதான் இருக்கும். 

எனவே திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலங்களை பெண்ணின் 16 வயதிலேயே தொடங்கிவிட வேண்டும்.ஒருவேளை திருமணம் தாமதமானால், இரு தீமைகள் உள்ளன. ஒன்று குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படும். இரண்டாவது அப்படியே குழந்தை பிறந்தாலும் பெற்றோரின் வயது மூப்பால் குழந்தைகள் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைவதிலும் பிரச்சினை இருக்கும். கடைசி காலத்தில் இருக்கும் போது உங்கள் குழந்தைகள் மாணவர்களாகவே இருப்பர். பெண்ணின் திருமண வயதை உயர்த்தியதன் மூலம் நாம் இயற்கையை மீறியுள்ளோம். எனவே ஒரு பெண் வயதிற்கு வந்தவுடனே அவர் குழந்தை பிறக்கும் தன்மையை அடைகிறார். 

எனவே அந்த வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். உதாரணமாக 16 வயதில் ஒரு பெண் பூப்படைந்து விட்டால் அதே வயதில் திருமணமும் செய்து வைக்க வேண்டும்.18 வயதில் ஒரு பெண் ஓட்டு போடும் போது ஏன் அதே வயதில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது’ என்று கூறினார்.சமாஜ்வாதி கட்சியின் மற்றொரு எம்பியான ஷாபிகர் ரஹ்மான் பார்க், ‘இந்தியா ஏழை நாடு. சிறிய வயதிலேயே தங்களது பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைத்துவிடதான் பெற்றோர் விரும்புவர்.

இந்த திருமண வயது திருத்த மசோதாவை நான் ஆதரிக்க மாட்டேன் என்றார். இதுகுறித்து கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் எங்கள் கட்சி முற்போக்குத்தனமானது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை தொடங்கியுள்ளோம். அந்த இரு எம்பிக்களின் கருத்தில் கட்சிக்கு உடன்பாடு இல்லை’ என்றார். சமாஜ்வாதி எம்பிக்களின் இந்த பேச்சு,  சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

click me!