
ஆளும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடிபழனிசாமி பேசும்போது, ‘திமுக ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் ஆகிறது. ஆனாலும் தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.
முக்கியமாக வங்கி கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் ,முதியோர் உதவி தொகை ,மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ,சுய உதவிக் குழுக்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அத்துடன் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தமிழக மக்களை வஞ்சித்து விட்டது. விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் ஆகியவற்றை மூட முயற்சித்து வருகிறது என்று சரமாரியாக குற்றம் சாட்டினார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு பொய் வழக்குகளை போட்டு மக்களை திசை திருப்ப பார்க்கிறது . மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை 2014ஆம் ஆண்டு வரும் போது திமுக ஆட்சி முடிவுக்கு வரும்’ என்று பேசினார்.
இந்நிலையில், சேலத்தில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 23 பேர் மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், கொரோனா பரவல் காரணமாக இருத்தல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையின் நடவடிக்கை எடுத்துள்ளனர்.