
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “உதய் திட்டத்தில் அ.தி.மு.க அரசு கையெழுத்திட்டது. அதனால் மின் வாரியத்துக்கு நிதிச் சுமை ஏற்பட்டது. ஓராண்டில் மின் வாரியத்தை மேம்படுத்தி ரூ.2,200 கோடி வட்டி சேமிக்கப்பட்டது. என்றாலும் கடந்த 10 ஆண்டில் மின் துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. இந்தக் கடும் நெருக்கடியில் இருக்கும்போது மத்திய அரசு தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக 28 முறை கடிதம் எழுதியிருக்கிறது. தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கடன் ஏதும் வழங்கக்கூடாது என மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதனால்தான் பொதுமக்களுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.” என்று செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போடுவதா.? உங்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.. தமிழக பாஜக ஆவேசம்!
மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மின் கட்டண உயர்வுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசின் மின்துறை அமைச்சர் வீட்டு உபயோக மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து வகை மின் கட்டணங்களையும் உயர்த்தி அறிவித்துள்ளார். உயர்த்தப்படும் மின் கட்டணத்திற்கு ஒப்புதல் கேட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெறுங்க.. அதிமுக சார்பில் ஸ்டாலினை கேட்கும் ஓ. பன்னீர்செல்வம்!
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை காரணம் காட்டியுள்ளார். தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு ஒன்றிய அரசு 28 முறைக்கும் மேலாக கடிதம் எழுதியுள்ள தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசு, அண்மையில் மருந்து விலைகளை உயர்த்தியதுடன் தற்போது அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து வசூலிக்கத் தொடங்கியுள்ளது. ஒன்றிய அரசின் இந்தத் தொடர் விலை ஏற்ற நடவடிக்கைகளின் விளைவாக அனைத்து அத்தியாவசிய உணவு பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
அடித்தட்டு மக்களின் கைகளுக்கு சில உணவுப் பொருட்களும், மருந்துகளும் எட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசைக் காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்துவது மக்கள் உணர்வில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கரோனா பெருந்தொற்றுப் பரவல் காலத்தில், தமிழக அரசு கடன் வாங்கும் அளவை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்த போது, ஒன்றிய அரசின் மின் கட்டணக் கொள்கையை ஏற்க வேண்டும் என நிபந்தனை விதித்ததை மக்கள் மறந்து விடவில்லை. இந்தச் சூழலில் மின் கட்டணங்கள் உயர்த்தும் திட்டத்தை நிறுத்தி வைத்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது'' என்று அறிக்கையில் முத்தரசன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்ல மாதாமாதம் மின் கணக்கெடுப்பு வாக்குறுதியை நிறைவேற்றுங்க.. மின் கட்டண உயர்வுக்கு சிபிஎம் அதிருப்தி!