சட்டவிதிகளை மீறி பேட்டி, ராம் மோகன்ராவ் கைது செய்யப்படவேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

First Published Dec 28, 2016, 12:26 PM IST
Highlights


சட்டவிதிகளை மீறி அரசியல்வாதிபோல் ராம் மோகன் ராவ் பேட்டி அளிப்பதும் , மத்திய மாநில அரசுகளை வம்பிழுப்பதும் , திசைதிருப்பும் முயற்சியிலும் ஈடுபடுகின்றார், அவர் கைது செய்யப்படவேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் குற்றச்சாற்றுகள் மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் காரணமாக பதவி நீக்கப்பட்ட  முன்னாள் தலைமைச் செயலாளர் இராமமோகன் ராவ், தமது வீட்டிலும், தலைமைச் செயலக அறையிலும் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாற்றுகளை முன்வைத்திருக்கிறார். 

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சவால் விடும் வகையில் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இராமமோகன் ராவ், தமது மகன் மீதான புகார்களுக்காக  தமது இல்லத்திலும், தலைமைச் செயலக அறையிலும் சோதனை நடத்த முடியாது என்றும், இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கூறியிருக்கிறார். 

அதிகாரிகள் மீதோ, தனிநபர் மீதோ ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் எழும்போது அவர்களுடன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று தான்.

 அதேபோல், மாநில நிர்வாகத்தின் தலைவராக உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தும் போது, மாநிலக் காவல்துறையின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதால் மத்திய பாதுகாப்புப் படை காவலுக்கு  நிறுத்தப் பட்டது என்று மத்திய அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருப்பதும் ஏற்கக் கூடியது தான்.

ஆனால், இராமமோகன் ராவ் தம் மீதான குற்றச்சாற்றுகளை திசை திருப்பும் வகையில் முழுநேர அரசியல்வாதியாக மாறி அரசியல் வசனங்களை பேசியிருக்கிறார். தாம் 1994&ஆம் ஆண்டிலிருந்து  முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றதாகவும், அவரது வழியில் தான் தாம் நடப்பதாகவும்  அவர் கூறியிருக்கிறார். 

வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதாவை இழுப்பதன் மூலம் இதை அரசியல் பிரச்சினையாக மாற்றி, அதன்மூலம் அரசியல் சர்ச்சை நெருப்பை மூட்டி அதில் குளிர்காய நினைக்கிறார். இது வருமானவரித் துறையின் விசாரணையை திசை திருப்பும் முயற்சியாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

இப்போது இதை செய்பவர் தொடர்ந்து வெளியில் இருந்தால் அனைத்து வித சாட்சிகளையும் கலைத்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, இராமமோகன் கைது செய்யப்பட வேண்டும்.

குற்றச்சாற்றுகளுக்கு உள்ளான, பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து இது போன்று பேட்டி கொடுப்பது பணி விதிகளுக்கு எதிரானது ஆகும். இதற்காகவே அவர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இராமமோகன் ராவ் குறிப்பிட்டுள்ள வேறு சில விஷயங்களும் குறிப்பிடத்தக்கவை.

 தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ஜெயலலிதாவால் தாம் நியமிக்கப்பட்டதாகவும், அந்த பதவியில் தாம் இன்னும் நீடிப்பதாகவும் கூறியிருக்கிறார். இது தமிழக அரசுக்கு சவால் விடக்கூடிய, கீழ்ப்படியாமையை காட்டும் செயலாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

click me!