அறிவிக்கப்படாத திடீர் பெட்ரோல் விலை உயர்வு - விஜயகாந்த் கண்டனம்

First Published Mar 5, 2017, 10:21 AM IST
Highlights
Often raising the petrol price escalator leader Vijayakanth condemned


பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மற்ற பொருட்களின் விலையும் உயர்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என  தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அத்யாவசிய பொருள்களின் விலை அறிவிக்கப்படாமல் உயர்த்தப்படுகிறது. இதுபோல், நாளுக்கு நாள் உயர்த்தப்படும் விலையினால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்களின் விலையை அடிக்கடி உயர்த்துவதால், மற்ற பொருட்களின் விலையும் அசுர வேகத்தில் உயர்ந்துவிடுகிறது. இதனால், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

கிராமங்களில் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதால், காய்கறிகளின் விளைச்சலும் முற்றிலுமாக ஸ்தம்பித்துவிட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற திடீர் விலை உயர்வால் பாதிக்கப்படுவோர், ஏழை மக்களாகவே உள்ளனர்.

இதனால், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் திட்டங்களை நடைமுறைபடுத்தும் சரியான நிர்வாக அமைப்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. மக்களின் தேவைக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்ய ஆக்கபூர்வமான திட்டங்களைத் தீட்டாத நிலையில் அரசு உள்ளது.

மக்கள் அன்றாட தேவையான உணவு பொருட்கள் மற்றும் அத்யாவசிய பொருள்களின் விலைகள் அதிகரிக்காமல் இருக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!