பழனிசாமி, பன்னீர்செல்வம் போஸ்டர்கள் கிழிப்பு..! பசும்பொன்னில் பதற்றம்..!

First Published Oct 29, 2017, 1:00 PM IST
Highlights
palanisamy and panneerselvam posters tear in pasumpon


தேவர் குருபூஜை விழாவுக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் எல்லாம் தினகரன் ஆதரவாளர்கள் கிழித்து வருவது கலவர சூழலை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 110-வது ஜெயந்தி விழாவும், 55-வது குருபூஜையும் நாளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்க உள்ளது. 

இதையொட்டி குருபூஜை அன்று தேவரின் நினைவிடத்தில் அரசு சார்பிலும், அ.தி.மு.க சார்பிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 8 அமைச்சர்கள் அஞ்சலி செலுத்த நாளை பசும்பொன்னுக்கு வர உள்ளனர்.

இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக  பசும்பொன்னிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் சிலர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 

கமுதி, பசும்பொன், அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் உள்ள முதல்வர் எடப்பாடியின் படத்தினையும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் படத்தினையும் தினகரன் ஆதரவாளர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். 

முதல்வர் எடப்பாடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்துள்ள இந்த சம்பவங்களால் நாளை முதல்வர் வருகையின் போது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 8000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் பசும்பொன் சுற்றுவட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
 

click me!