சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக இபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் உள்ளது. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு மோதிக்கொண்டுள்ளன. இதனையடுத்து கடந்த ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானம் நிறவேற்றாமல் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்புதல் பெறாத காரணத்தால் அந்த பதவி காலியாகவிட்டதாக கூறப்பட்டது. அப்போது ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என இபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
ஓபிஎஸ் ஆதரவாக தீர்ப்பு
இதனையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூன் 23ஆம் தேதியன்று அதிமுகவில் இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.
இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆனது செல்லாது...! அதிர்ச்சி அளித்த உயர்நீதிமன்றம்... உற்சாகத்தில் ஓபிஎஸ்
உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இதன் காரணமாக அதிமுக இடைகால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாதாகிவிட்டது. அதே போல அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதும், அதே போல ஓபிஎஸ் தரப்பில் இருந்து நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் செல்லாது என தற்போது ஆகியுள்ளது. மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஓபிஎஸ் வீடு உள்ள பகுதியான கிரீன் வேஸ் சாலையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.இந்தநிலையில், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில், மகத்தான தீர்ப்பு, மக்களின் தீர்ப்பு, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறினார். முழுமையான தீர்ப்பு வெளியாகவில்லை எனவே மேல் முறையீடு தொடர்பாக தற்போது கூற இயலாது என தெரிவித்தார். மேலும் ஒருங்கிணைப்பாளரின் கோரிக்கையை நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்
திமுகவில் இணைகிறாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்