இபிஎஸ் பக்கத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறார் ஓபிஎஸ்..! முதல் வரிசையா.? கடைசியா.? வெளியான தகவல்

By Ajmal KhanFirst Published Feb 13, 2024, 1:28 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்வதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் ஓ.பன்னீர் செல்வத்தின் வேறு இடத்திற்கு இருக்கை மாற்றி அமைக்கப்படவுள்ளது. 
 

ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டார். ஆனால் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சட்டபேரவை சபாநாயகரிடம் பல முறை கடிதமும் கொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

இபிஎஸ் கோரிக்கை- ஏற்றுக்கொண்ட ஸ்டாலின்

அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 4 முறை சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்திருப்பதாகவும், பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம் என்றும் கூறினார். மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை என்பது நீண்ட நாட்களாக உள்ள மரபு எனவும், பல ஆண்டுகளாக உள்ள மரபை சபாநாயகர் நிறைவேற்றி தர வேண்டும் என  கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் நீண்ட நாட்களாக அவையில் வலியுறுத்தப்பட்டுவருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவணம் செய்ய வேண்டும் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். 

சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம்.?

தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்தநிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கும்பட்சத்தில் ஓ.பி.எஸ் எங்கே அமர்வார் என கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அமரும் முன் வரிசையில் ஏதேனும் ஒரு இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்படும் என சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு 3 ஆம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

கிளாம்பாக்கத்தில் பெரிய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிட்டோம்... சிறு பிரச்சனைகளும் தீர்க்கப்படும் - ஸ்டாலின்

click me!