அதிமுக மாநில மாநாடு மதுரையில் வருகிற 20 ஆம் தேதி நடைபெறுவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்கு போட்டியாக அன்றைய தினம் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி காரணமாக பல பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் இருந்த இரட்டை தலைமை மாற்றப்பட்டு ஒற்றை தலைமை உருவாக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். நீதிமன்றங்களில் சட்ட போராட்டத்தையும் நடத்தி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அதிகளவு இருப்பதால் சட்ட போராட்டத்தில் எடப்பாடி அணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுக மாநில மாநாடு
இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனோடு கை கோர்த்துள்ளார். கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஒன்றினைந்து போரட்டத்தையும் நடத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிமுக மாநில மாநாட்டிற்கான தேதியை அறிவித்துள்ளார். அதன் படி மதுரையில் வருகிற 20 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் 10 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதற்கு போட்டி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் அணியினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் ஆலோசகர் பன்ருட்டி ராமசந்திரன் தலைமையில்நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு
சென்னை வேப்பரி சாலையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி நடத்தும் மாநில மாநாட்டிற்கு எதிராக ஓபிஎஸ் அறிவித்துள்ள கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்