அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவுக்கு அதிமுகவில் இருந்து ஒரு வாக்கு கூட வராது என தெரிவித்த எஸ்.வி.சேகர் தமிழகத்தில் பாஜக ஒரு சீட் கூட ஜெயிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை- எஸ்.வி.சேகர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் திரைப்பட நடிகரும்,பாஜக முன்னாள் நிர்வாகியுமான எஸ்.வி சேகருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அண்ணாமலை பிராமணர்களை கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக பிராமணர்களை ஒன்றினைத்து தனி கட்சி தொடங்க இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்தநிலையில், காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு எஸ்.வி.சேகர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், சூப்பர் ஸ்டார் பட்டமே தமிழ்நாட்டில் முதல் முதலில் தியாகராஜ பாகவதருக்கு தான் இருந்தது. அவர் கோபித்துக் கொண்டாரா? இப்போது ரஜினி கோபித்துக் கொள்கிறாரா, இல்லை. ரஜினி இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என தெரிவித்தார்.
நடை பயணத்தால் பயன் இல்லை
ரஜினியை வைத்து மற்றவர்கள் பேசுகிறார்களே,தவிர ரஜினி அதை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அவர் என்றைக்கு என்னுடைய படம் சரியாக போகவில்லையோ அன்றைக்கு விலகிக் கொள்கிறேன் என்கிறார். அடுத்தது சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து அடுத்தது விஜய் தான் கவலைப்பட வேண்டும் என கூறினார். அண்ணாமலை நடை பயணம் தொடர்பாகவும், அதிமுகவுடன் பாஜக மோதல் போக்கு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஆவேசமாக பதில் அளித்தவர், தமிழ்நாட்டைப் பொருத்தவரைக்கும் பாஜகவில் குறைந்தது பத்து வருடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தால் தான் பாஜகவுடைய ஐடியாலஜி தெரியவரும். எதுவுமே தெரியாமல் படக்கென்று யாரோ ஒருவரை சந்தோஷப்படுத்தி,அந்த நபர் இவரை சந்தோஷப்படுத்தி, திடுக்கென்று இந்த பதவியைக் கொடுத்திருக்கிறார்கள்.
அதிமுக ஓட்டு பாஜகவிற்கு இல்லை
இதனால் பாஜகவுக்கு தான் நஷ்டம் ஏற்படுமே தவிர, அண்ணாமலைக்கு பெரிய லாபம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அண்ணாமலை இருக்கின்ற வரையில், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட்டு கூட பெற வாய்ப்பே கிடையாது, ஏனென்றால் அண்ணாமலையை பொருத்தவரைக்கும் அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது மாதிரியே அவர் பேசி வருகிறார். அதிமுக கூட்டணி தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பலம். அந்த பலத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜகவில் இருப்பவர்கள் மோடிக்காகவும், அமித் ஷாக்காகவும் அவர்கள் அந்த கூட்டணி தர்மத்தை மதித்தாலும் என்றைக்கு ஜெயலலிதாவைப் பற்றி அண்ணாமலை தவறாக பேசினாரோ அதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் மன்னிக்க தயாராக இல்லை. எனவே பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கிற வரைக்கும் அதிமுகவினுடைய ஒரு ஓட்டு கூட பாஜக பக்கம் விழாது என எஸ்.வி.சேகர் கூறினார்.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை நடை பயணத்திற்கு ஆதரவு.... ஆனால் பாஜகவிற்கு ஆதரவு இல்லை- விஜய பிரபாகர்