பேனா சிலைக்கு எதிர்ப்பா.? எம்.ஜி.ஆர் நினைவிடம், சிவாஜி, பட்டேல் சிலைக்கு செலவானது என்ன கணக்கு.? சுபவீ பொளேர்!

By Asianet Tamil  |  First Published Jul 30, 2022, 10:51 PM IST

2012 ஆம் ஆண்டு  எம்ஜிஆர் நினைவிடத்தைப் புதுப்பிக்க அதிமுக அரசு 43 கோடி செலவிடவில்லையா? என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை மெரீனா கடற்கரையில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக சுப. வீரபாண்டியன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஏதேனும் ஒன்றைத் தேடிப்பிடித்து, தமிழக அரசுக்கு எதிராய், திமுகவிற்கு எதிராய்க் கொண்டுவந்து நிறுத்திவிட வேண்டும் என்பதில் ஒரு கூட்டம் எப்போதும் கவனமாக இருக்கிறது. இப்போது அவர்களுக்குக்  கிடைத்திருப்பது கருனாநிதியின் பேனா! ஆம், கருணாநிதியின் பேனா போன்ற ஒரு சிலையை, அவர் நினைவிடத்திற்கு அருகில், கடலில் வைத்திடும் திட்டத்தைத் தமிழக  அரசு அறிவித்துள்ளது. இன்னும் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும்,  பொறுக்க முடியாதவர்கள் பலர் இப்போதே புலம்பத் தொடங்கி விட்டார்கள்.

இதையும் படிங்க: திமுக - பாஜக கூட்டணி ..? அப்படி நடக்க வாய்ப்பில்லை.. நெற்றியடி கொடுத்த ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா..?
 
ஒரு பேனாவுக்குச் சிலையா? அதுவும் 80 கோடியிலா? இனிமேல் அவருடைய கண்ணாடி, செருப்பு எல்லாவற்றிற்கும் சிலை வைப்பார்களா? - இப்படி ஒரு கூச்சல் திட்டமிட்டு எழுப்பப்படுகிறது. பேனாவுக்குச் சிலை வைப்பதெல்லாம் சேட்டை என்கிறார், சேட்டையைத் தவிர வேறு எதையும் அறியாத ஒரு சின்ன மனிதர்! அது ஒரு பேனாவோ, வெறும் பேனாவோ இல்லை. தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்களைத் தட்டியெழுப்பிய பேனா. அந்தப் பேனா, அய்யாவின் கைத்தடி! அண்ணாவின் நுண்ணறிவு! கலைஞரின் கைவாள்! அவருடைய 14 ஆம் வயதில், எழுத்துவதற்காகத் தலைகுனிந்த அந்தப் பேனா, இன்றுவரையில், எத்தனையோ தமிழர்களைத் தலைநிமிர வைத்துள்ளது! முழுநேர எழுத்தாளர்களால்கூட  எழுத முடியாத அளவிற்கு எழுதிக் காட்டியவர் தலைவர் கருணாநிதி!

Tap to resize

Latest Videos

அவருடைய வாழ்க்கை வரலாறு மட்டும் 6 தொகுதிகள் - 4162 பக்கங்கள்!  உடன்பிறப்புக்கு ஓயாமல் கடிதங்கள்! 75 திரைப்படங்களுக்கான கதை, வசனம்! அளவிறந்த அரசியல் கட்டுரைகள்! சிறுகதைகள், நால்வல்கள், கவிதைகள் என்று இன்னொரு பக்கம் இலக்கியச் சித்திரங்கள்! எல்லாவற்றையும் எழுதிக் குவித்த அந்தப் பேனா, சிலையாக நின்று இன்னும் பலரை எழுதத் தூண்ட வேண்டும்  என்பதுதான் நோக்கம்! "நான் எழுதவில்லை, விரல்களால் சிந்திக்கிறேன்" என்பார் எழுத்தாளர்  ஐசக் ஆசிமோவ். அது கருணாநிதிக்கும் பொருந்தும்.  அது சரி, அதற்காக 80 கோடி ரூபாய்  மக்கள்  வரிப்பணத்தைச் செலவழிப்பதா என்று குமுறுகிறார்கள்.  அந்தப் பணத்தில் மக்களுக்கு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாதா என்று கேட்கின்றனர். மக்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிவித்தபோதெல்லாம், இப்படி இலவசத் திட்டங்களால், மக்களைச்  சோம்பேறி ஆக்குகின்றனர் என்று ஆதங்கப்பட்ட அதே மனிதர்கள்தான் இப்போது இப்படிப் பேசுகிறார்கள்!

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் ஒரு மதுக்கடையைக்கூட மூடல... தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றல.. அன்புமணி ஆவேசம்!
 
ஏன், மக்களுக்கான நல்ல திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றவே இல்லையா? எவ்வளவு வேலைவாய்ப்பு முகாம்கள், எவ்வளவு நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப் பாடநூல், மிதிவண்டி முதலான பல பொருள்கள், இப்போது புதிதாகக்  காலைச்  சிற்றுண்டி என எத்தனை திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் இவர்கள் கண்மூடிக் கொள்வார்கள். இந்தப் பேனா சிலைக்கு 80 கோடி செலவா என்று கேள்வி கேட்பவர்கள், பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு நம் முதல்வர் ஆற்றிய 9 நிமிட உரை தமிழ்நாட்டிற்கு 9000 கோடி ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகையைக் கொண்டு வந்தது குறித்துப் பேசவே மாட்டார்கள்! ஓர் அரசு என்றால் பல்வகைப் பணிகளையும்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதோ இப்போது நடந்துகொண்டிருக்கும் உலக அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிக்கு ஏன் இவ்வளவு செலவு  என்று கேட்பது சரியா? விளையாட்டு, இசை, கலை, இலக்கியம் என்று எல்லாவற்றிற்கும்தான் அரசு செலவு செய்யும். பேனா என்பது ஒரு குறியீடு. கலை இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதே அதன் உள்ளீடு!

சரி, இதற்கு முன்பு இப்படிச் செலவு செய்யப்பட்டபோதெல்லாம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? 2012 ஆம் ஆண்டு  எம்ஜிஆர் நினைவிடத்தைப் புதுப்பிக்க அதிமுக அரசு 43 கோடி செலவிடவில்லையா? அப்போது 43 கோடி என்றால், 10 ஆண்டுகளுக்குப் பின் அந்தத் தொகையின் இன்றைய மதிப்பு என்ன?  குஜராத்தில் வைக்கப்பட்டுள்ள படேல் சிலைக்கு, மாநில அரசு, ஒன்றிய அரசு எல்லாம் சேர்ந்து ஏறத்தாழ 3000 கோடி செலவு செய்துள்ளார்களே! வரும் அக்டோபர் மாதம் மராத்தியத்தில்  நிறுவப்பட இருப்பதாகத் திட்டமிட்டுள்ள சத்ரபதி சிவாஜி சிலை 696 அடி  உயரம் கொண்டதாக அல்லவா இருக்கப் போகிறது. அதற்காகச் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ள தொகை 3643,78 கோடி ஆயிற்றே! அதனையும் தாண்டி அது 5000 கோடி வரையில் ஆகும் என்று சொல்கின்றனர். அது மக்கள் வரிப்பணம் இல்லையா? அது குறித்தெல்லாம் இந்த 'மக்கள் நல  விரும்பிகள்' ஏன் குரல் கொடுக்கவில்லை? உங்கள் எஜமானர்களுக்கு ஒரு சட்டம், எங்கள் தலைவருக்கு ஒரு சட்டமா?

இதையும் படிங்க: நீங்க ஏன் ஜெயிலில் கஷ்டப்படுறீங்க.? ஊழல்வாதிங்க பெயரை சொல்லுங்க பார்த்தா.. பற்ற வைக்கும் மிதுன் சக்கரவர்த்தி!
 
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறோம் - கருணாநிதியின் பேனா காவியம் சொல்லும்! கருணாநிதியின் பேனா காலத்தை வெல்லும்!!” என்று சுப. வீரபாண்டியன் தெரிவித்தார்.     

click me!