‘ நவம்பர் 8-ந்தேதி துக்ககரமான நாள் ’ மோடி அரசு மீது ராகுல் காந்தி கடும் சாடல்

First Published Oct 30, 2017, 4:06 PM IST
Highlights
November 8 a sad day for India Rahul Gandhi on demonetisation


பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் நோட்டு தாக்குதல் என்பது ஒரு முழுமையான ஒரு பேரழிவு, நாட்டின் பொருளாதார அழிக்கத் தொடுக்கப்பட்ட தாக்குதல்தான் சரக்கு மற்றும் சேவை வரி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக மத்திய அரசு நேற்று விமர்சித்தார்.

நவம். 8ந்தேதி

நாட்டில் ஊழல்,கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பிரதமர் மோடி ரூபாய் நோட்டு தடையை கொண்டு வந்தார். வரும் நவம்பர் 8-ந் தேதியோடு ரூபாய் நோட்டு தடை கொண்டுவரப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. அந்த நாளை  கருப்பு தினமாக கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

இதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர்ராகுல் காந்தி தலைமையில் நேற்று 3 மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

மேலும், ஜி.எஸ்.டி. தொடர்பாக தனியாக ஒரு கூட்டம் நடந்தது இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த தலைவரும்,மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாதிப்பு

இந்த கூட்டத்துக்கு பின் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஆகியவற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலை குறித்து கட்சியில் ஆலோசிக்கப்பட்டது.

ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. ஆகிய  இரு பெரும் தாக்குதல்களால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

துக்கமான நாள்

 ரூபாய் நோட்டு தடை என்பது நாட்டுக்கு ஏற்பட்ட முழுமையான பேரழிவு. எதற்காக நவம்பர் 8-ந்தேதியை மத்திய அரசு கொண்டாடப் போகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த நாள் நாட்டுக்கு மிகவும் துக்கமான நாள்.

புரியவில்லை

நவம்பர் 8-ந்தேதி கொண்டாடப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். சாமானிய மக்களின் வேதனையை பிரதமர் மோடி புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மக்களின் உணர்வுகளும், வேதனைகளும் புரியவில்லை.

நாட்டுக்கு ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. என அடுத்தடுத்து இரு அதிர்ச்சிகளை மோடி கொடுத்துள்ளார். பொருளாதாரத்தை அழிக்க நடத்தப்பட்ட தாக்குதல்தான் ஜி.எஸ்.டி. வரி. ஜி.எஸ்.டி. போன்ற நல்ல திட்டம் எப்படி இவ்வாறு அழிக்கப்பட்டது என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!