ஸ்டெர்லைட் விவகாரத்தைக் காட்டிலும் என்.எல்.சி. 100 மடங்கு பெரிய பிரச்சினை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் மதுரை மாநகர் பாமக அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தென் மாவட்டங்களில் வேலை இல்லாத சூழல் தான் கலவரம், பிரச்சனைகள் உருவாக காரணம். காவிரி - வைகை - தாமிரபரணி இணைப்பு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
தாமிரபரணியும், வைகையாறும் மோசமான நிலையில் உள்ளது. வைகை ஆறு சாக்கடை போல உள்ளது. சங்ககாலத்தில் வைகை ஆற்றை புகழ்ந்து எவ்வளவு பாடல்கள் உள்ளன. ஆனால் இன்றைய நிலை சாக்கடையாக மாறிவிட்டது. தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டு தோறும் 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து நீர் பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தின் மொத்த கடன் 12.5 லட்சம் கோடி திமுக அரசு இரண்டு ஆண்டுகாலத்தில் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.
விளை நிலங்களை கையகப்படுத்தாதீர்கள். விளைநிலங்களை காப்பாற்றுங்கள். விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் அரணாக இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு விவசாய நிலங்களை ஆக்கிரமித்து விளை நிலங்களை கையகப்படுத்தி பெரு முதலாளிகளிடம் ஒப்படைத்து வருகிறது. நெய்வேலியில் அக்கிரமம், அட்டூழியம் நடந்து வருகிறது. என்எல்சி என்ற மோசடி நிறுவனம் ஒன்பது ஆண்டு காலத்தில் 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை அழித்து நாசப்படுத்தி மண்ணையும், நீரையும் உறிஞ்சி கடலில் அனுப்பி வைத்து ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது.
திருச்சி அருகே மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்
தமிழகத்தின் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் என்எல்சி பங்கு 800 மெகாவாட் மட்டும் தான். இதற்கு முன்பு 40 ஆயிரம் ஏக்கர் அழித்துவிட்டார்கள். தற்பொழுது 50 ஆயிரம் ஏக்கர் கேட்கிறார்கள். நிலத்தை அழித்து மின்சாரத்தை பிச்சை போடுகிறார்கள். காசு கொடுத்து தான் மின்சாரத்தை வாங்குகிறோம். அப்படி நிலத்தை கொடுத்து மின்சார வாங்க வேண்டிய தேவை கிடையாது.
நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னால் மட்டும் போதுமா? அப்படி சொன்னால் டெல்டா மாவட்டத்தை பாதுகாப்பது அவரது கடமை அல்லவா? கதிர் வரும் நெல்லை அளிக்கும் காட்சியை பார்த்துவிட்டு நீதிபதியே கண்ணீர் விட்டேன் எனக் கூறியிருக்கிறார். விவசாயத்தை அழித்துவிட்டு சோற்றிற்கு என்ன செய்வீர்கள் என நீதிபதியே கேட்டுள்ளார். நீதிபதி அவ்வளவு கேட்டும் மீண்டும் நிலத்தை கையகப்படுத்தும் வேலையை தொடங்கிவிட்டனர்.
தமிழக அரசு எப்போது டாஸ்மாக் கடைகளை மூடப் போகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். படிப்படியாகவாது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இந்த அரசு மதுவை விற்கவில்லை. மதுவை திணித்து வருகிறார்கள். அதி வேகமாக மதுவை திணிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி நினைத்தார்.
10 ஆண்டுகளுக்கு முன்பாக விவசாய நிலங்களை எடுத்திருக்கிறீர்கள் என்றால் எடுத்தால் அழித்து விட வேண்டுமா? என்எல்சி நிலக்கரியை இறக்குமதி செய்து வேண்டுமானால் செயல்படட்டும். அமைதியான போராட்டத்தை காவல்துறையினர் பாமக தொண்டர்களின் மண்டையை உடைத்ததால் மட்டுமே பிரச்சனையாக மாறியது. காவல்துறையினர் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்கினர்.
தடுப்பு சுவற்றை தாண்டி பறந்து சென்ற கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலி
நாங்கள் நினைத்தால் எங்களுக்கு வன்முறை செய்யத் தெரியாதா? ஆனால் அமைதியான அரசியல் வளமான அரசியல் என்பதே எங்களது நோக்கம். அண்ணாமலை அன்னூர் சிப்காட் நிறுவனம் கொண்டு வர 3 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்ட போது தரிசு நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்த போது அதனை கையகப்படுத்தக் கூடாது என அண்ணாமலையும் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று போராட்டம் நடத்தினார்கள். அந்த திட்டத்தை அரசு நிறுத்தி விட்டார்கள்.
அங்கே சிப்காட் வந்தால் 20,000 தமிழர்களுக்கு வேலை கிடைத்திருக்குமே ஏன் தடுத்து நிறுத்தீனீர்கள், அன்னூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா? சோறு போடும் நிலத்தை அழிக்காதீர்கள் என டெல்லியில் சென்று அண்ணாமலை கூற வேண்டும் , டெல்லியில் சென்று வாதிட்டு என்எல்சி விவகாரத்தை அண்ணாமலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
என்எல்சி நிறுவனத்தில் தமிழர்கள் பணி புரிகிறார்கள் என அண்ணாமலை கூறும் தமிழர்கள் என்எல்சி அதிகாரிகள் வீட்டில் தோட்ட வேலையில் தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பாமகவின் நோக்கம் 2026 புதிய கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் அமைக்க வேண்டும் அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்போம் , அதற்கு காலம் நேரம் வரும் , நேரம் வரும்போது சொல்வோம் என்றார்.