பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மக்களவைக்கு தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் இண்டியா கூட்டணிக்கு 175 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்- கட்சிகள் தீவிரம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என திட்டத்தில் பாஜக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பாஜகவை எதிர்க்க நாட்டில் உள்ள முக்கிய எதிர்கட்சிகள் இணைந்து இண்டியா என்ற கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாஜகவிற்கு கடும் போட்டியை கொடுக்கலாம் என எதிர்கட்சிகள் திட்டம் வகுத்து வருகிறது.
இந்தநிலையில் இண்டியா டிவி செய்தி சேனல் மற்றும் சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து மக்களவைத் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அந்த கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் எனவும், இண்டியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
கருத்து கணிப்பு- யாருக்கு வெற்றி
அதன் படி நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 73-ல் வெற்றிபெறும். இந்தியா கூட்டணி 7 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி 9, இண்டியா கூட்டணி 30-ல் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்றும் அங்கு இண்டியா கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக கூட்டணி 24 இடங்களிலும் இண்டியா கூட்டணி 24-ல் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னடைவை சந்திக்கும் காங்கிரஸ்
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படிகர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக கூட்டணி 20, இண்டியா கூட்டணி 7-ஐ கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது இதே போல மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் பாஜக கூட்டணி 24, இண்டியா கூட்டணி 5-ஐ கைப்பற்றும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளையும் இண்டியா கூட்டணி கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பாஜக- இண்டியா எந்தனை இடங்களை கைப்பற்றும்
மொத்தமாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலில் 318 தொகுதிகளைக் கைப்பற்றி 3-வது முறையாக மத்தியில் ஆட்சி பாஜக அமைக்கும் எனவும் இதில் பாஜக 290 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 66 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 29 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இண்டியா கூட்டணி 175 இடங்களை கைப்பற்றக்கூடும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்