பொய்யான அவதூறான ஆடியோவை வெளியிட்ட சமூக விரோதிகள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளதாக நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளரின் சர்ச்சை ஆடியோ
தமிழக அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், அண்ணா நகர் கார்த்தி உள்ளிட்டவர்களை பற்றி தி.மு.க கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஆட்சிக்கு 10 கதவுகள் இருக்கக் கூடாது. அரசியலில் இவர் ஒருவர் மட்டுமே முடிவு எடுப்பது போல இருக்க வேண்டும். அண்ணா நகர் கார்த்தி தொழில் நிமித்தம், டெண்டர் விஷயம் தொடர்பாக வந்திருப்பவர்களிடம் மட்டுமே பேசுவார்,
அவர் மாடியில் இருந்து கீழே வருவதற்கே 11.30 மணி ஆகிவிடும். அவரும் ஒரு பவர் சென்டர். அன்பில் மகேஷ் எங்கே தங்கியிருப்பார் என்று திருச்சியில் இருப்பவர்களுக்கே தெரியாதாம். நேருவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், இவரை அப்படிப் பார்க்க முடியாது என சொல்கிறார்கள். என பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அன்பாகப் பேசி பழகக் கூடியவன்
இந்தநிலையில் ஆடியோ தொடர்பான புகாருக்கு தி.மு.க கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் கோவை மாநகர மாவட்ட தி.மு.க. செயலாளராகப் பொறுப்பில் இருந்து பணியாற்றி வருகிறேன். 1981-ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த நாள் முதல் தி.மு.க.வில் மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் தி.மு.கழகத்தில் பல்வேறு பொறுப்பில் இருந்து பணியாற்றி வந்து உள்ளேன்.
மேலும் துணை மேயராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்காகவும், பொது மக்களின் நலனுக்காகவும் பணியாற்றி வந்து உள்ளேன். நான் எல்லோரிடமும் அன்பாகப் பேசி பழகக் கூடியவன். கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களிடமும், அமைச்சர் பெருமக்களிடமும் நான் மிகவும் பொறுப்புடனும் நடந்து பணியாற்றி வருகிறேன்.
பொய்யான ஆடியோ
தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கும், கொள்கைக்கும் என்றும் குந்தகம் ஏற்படாமல் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் அரவணைத்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறேன்.என் மீது அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் பொய்யாக 39 வழக்குகள் போட்டு உள்ளார்கள். அந்தப் பொய் வழக்குகளைச் சட்ட ரீதியாக எதிர்கொண்டும், கழகத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறேன். எனது மேற்படி பணிகளைக் கண்டு பொறாமைப்பட்டு, சில சமூக விரோதிகள் என்னைப் பற்றி பொய்யான - அவதூறான ஆடியோவை போலியாக தயார் செய்து,
வதந்தி பரப்ப வெளியிட்டு உள்ளார்கள். இத்தகைய வதந்தி பரப்பும் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.மேலும், மேற்படி வதந்தியான, பொய்யான அவதூறான ஆடியோவை வெளியிட்ட சமூக விரோதிகள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்து உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் நா.கார்த்திக் தெரிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்