தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறதா? சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா? இது அராஜகத்தின் உச்சம்! கொதிக்கும் அதிமுக.!

By vinoth kumarFirst Published Jul 26, 2023, 1:39 PM IST
Highlights

அறுவடைக்கு தயாராக இருக்கின்ற நெற்பயிர்களை அழித்து, வாய்க்கால் வெட்டுகின்ற என்எல்சி இந்தியா நிறுவனத்தின் போக்கு அராஜகத்தின் உச்சமாகும். 

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதாபிமானமற்ற இந்த செயலுக்கு துணை போகின்ற விடியா திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் கூறியுள்ளார். 

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி சுரங்கப்பணிகளை விரிவுப்படுத்த என்எல்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி இருந்த போதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் நிலத்தில் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. விலை நிலங்களில் நவீன எந்திரங்கள் மூலம் வாய்க்கால் வெட்டும் பணியை துவக்கி நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான அருண்மொழி தேவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- என்எல்சி இந்தியா நிறுவனத்தின் விவசாயிகள் விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

கடலூர் மாவட்டத்தில், நில எடுப்பு என்ற பெயரில் விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்காமல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களை நிறைவேற்றாமல், தற்போது விளைநிலங்களில் இன்னும் 10, 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருக்கின்ற நெற்பயிர்களை அழித்து, வாய்க்கால் வெட்டுகின்ற என்எல்சி இந்தியா நிறுவனத்தின் போக்கு அராஜகத்தின் உச்சமாகும். தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மூலம் மக்களை முடக்கி, அவர்களை மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கி, விவசாயிகளையையும், விவசாயத்தையும் அழிக்கும். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதாபிமானமற்ற இந்த செயலுக்கு துணை போகின்ற விடியா திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என அருண்மொழி தேவன் கூறியுள்ளார். 

click me!