அமைச்சர் கே.என் நேரு, அன்பில் மகேஷ், அண்ணா நகர் கார்த்தி உள்ளிட்டவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சர் பி.டி.ஆர் பேசியாக ஆடியோ ஒன்று வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் நா.கார்த்திக். இவர் திமுக தலைமையின் செயல்பாடுகளை விமர்சித்து பேசுவதாக ஆடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், அ.தி.மு.க வில் ஜெயலலிதா மட்டுமே முடிவு எடுத்தனர். வேறு யாரும் நுழைய முடியாது. இதை எல்லாம் செய்யாவிடின் மிகவும் சிரமம். நூறு பேரை நீக்குவதாக இருந்தாலும் அவர் பெயரில் தான் அறிக்கை வரும். ஆட்சிக்கு 10 கதவுகள் இருக்கக் கூடாது. அரசியலில் இவர் ஒருவர் மட்டுமே முடிவு எடுப்பது போல இருக்க வேண்டும்.
அண்ணாநகர் கார்த்தி வீட்டில் தினமும் காலையில் 200 முதல் 300 பேர் நிற்பார்கள். அவர் மீட்டிங்கில் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் வீட்டிற்குள் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார். காலை 8.30 மணிக்கு தான் எழுந்திப்பார். 10.30 மணி வரை உடற்பயிற்சி செய்வார். தொழில் நிமித்தம், டெண்டர் விஷயம் தொடர்பாக வந்திருப்பவர்கள் மட்டும் அந்த நேரத்தில் பேச அனுமதிக்கப்படுவார்கள். அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதற்கே காலை 11.30 மணி ஆகிவிடும். அவரும் ஒரு பவர் சென்டர். அன்பில் மகேஷ் எங்கே தங்கியிருப்பார் என்று திருச்சியில் இருப்பவர்களுக்கே தெரியாதாம். நேருவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், இவரை அப்படிப் பார்க்க முடியாது என சொல்கிறார்கள்.
நேரு நுனிப் புல் மட்டும் மேய்வார். அப்படியே எல்லா தோட்டத்திலும் மேய்ந்து கொண்டே செல்வார். புத்திசாலித்தனமான அரசாக இருந்திருந்தால், கோவைக்கு ஆண் மேயரை கொண்டு வந்திருக்க வேண்டும். கட்சியை அப்படித் தான் வளர்க்க முடியும். கீழே உள்ள 100 கவுன்சிலர்களை வைத்து கட்சியை வளர்க்க முடியாது. எதையும் முறையாக செய்வதில்லை. ஒரு பெண் மேயர் 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ களை எப்படி எதிர்கொள்ள முடியும். அவர்களின் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும். பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது. அதே நேரத்தில் தொகுதி மறுவரையும் சரியாக செய்யவில்லை. மாற்றி அமைக்க வேண்டும் என தலைவரே சொல்லியிருக்கார் என்பது போல அந்த ஆடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவிற்கு கோவை தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்