பிரதமர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - ரந்தீப் சுர்ஜிவாலா ஆவேசம்

First Published Dec 30, 2016, 9:55 AM IST
Highlights


ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்காக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிதாவது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நடவடிக்கை, மக்களின் பணத்தை பறிக்கும் மிகப் பெரிய ஊழலாகும். இது, கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக, ஏழைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

மத்திய அரசின் முன்யோசனை இல்லாத இந்த நடவடிக்கையால் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியானதில் இலிருந்து ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் 126 முறை மாற்றப்பட்டிருக்கின்றன. இதனால், ஓர் அறிவிக்கப்படாத நெருக்கடி சூழலில் நாடு சிக்கித் தவிக்கிறது.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் 50 நாட்களில் சீராகும் என கூறினார். ஆனால், அந்த காலக்கெடு முடிந்துவிட்டது.

தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு இன்னும் 8 மாதங்களாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அப்படி இருக்கும்போது, இந்த நிலைமை எப்படி சீராகும்? யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை கொடுப்பதில் மோடி தலைசிறந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

மக்களை தேவையில்லாமல் இன்னலுக்குள் தள்ளியதற்காக, தனது புத்தாண்டு தின உரையில் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை கண்டித்து வரும் 6ம் தேதி முதல் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!