திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெறும் நிலையில், இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் முதன்மை விருந்தினராக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் பிபெக் டெப்ராய் பங்கேற்கிறார்.
மேலும் சிறப்பு விருந்தராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். மேலும் அமைச்சரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பொன்முடி வீட்டில் நடந்த ED சோதனை.! கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் மதிப்பு இவ்வளவா.? வெளியான தகவல்
இதன் தொடர்ச்சியாக மாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்த நிலையில் அமைச்சர் காலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பங்கேற்காத பட்சத்திலும் பட்டமளிப்பு விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.