திமுகவுக்கு பதிலடி - மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

First Published Oct 22, 2016, 5:37 AM IST
Highlights


 காவிரி மேலாண்மை பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவேன் என கூறிய மு.க.ஸ்டாலினின் தலைமையை ஏற்க விரும்பாத மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் தனியாக டெல்லிக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்து மேலாண்மை வாரியம் அமைக்க மனு கொடுத்தனர்.

காவிரி மேலாண்மை விவகாரத்தில்மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு எதிராக நிலை எடுத்தது. இதனால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. காவிரி பிரச்சனையில் சட்டத்தின் மூலமே தீர்வு காண வேண்டும் என்பது  அதிமுகவின் நிலைபாடு.

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது மற்ற கட்சிகளின் நிலைபாடு. அதே நேரம் ஆளுங்கட்சி அனைத்து கட்சியை கூட்டினால்தான் கலந்துகொள்வோம் என மதிமுக , பாஜக , இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் நிலைபாடு. 

இதனிடையே அனைத்து கட்சி கூட்ட கோரிக்கை வைத்த மு.க.ஸ்டாலினுக்கு தாமே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது. இதை தஞ்சையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பேசிய போது தான் தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்திப்பேன் என்றார்.

ஆனால் அவரது அனைத்து கட்சி கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. பலர் விமர்சனம் செய்தனர். இதனால் அவர் பின்வாங்கினார். அனைத்து விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் சில விவசாய சங்கங்களை கூட்டி அதில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றி அதை கனி மூலம் டெல்லியில் ஜனாதிபதியிடம் கொண்டு சேர்த்தார். 

இதனிடயே மு.க. ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் டெல்லி சென்று ஜனாதி பதியை சந்தித்து மனு அளித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டியத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில் ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், இரா. முத்தரசன் ஆகியோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனுவினை இன்று வழங்கினார்கள் .

click me!