மது விற்பனைக்கும் பிள்ளையார் சுழி போட்ட தந்தை.. அதுக்கு மேலே மகன் ஸ்டாலின்.. வச்சு செய்யும் பொன்னுசாமி..!

By vinoth kumar  |  First Published Apr 24, 2023, 12:31 PM IST

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் விற்பனை பெருகி, கோடிகளில் குவியும் வருமானத்தை பார்த்து சட்டப்பேரவையிலேயே உள்ளம் பூரித்து, தமிழக அரசு புளகாங்கிதம் அடைந்தது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் புன்முறுவல் பூத்து, புன்சிரிப்போடு கவனித்ததை காணும் போது அந்த புன்சிரிப்பில் "மக்கள் நலனாவது, மண்ணாங்கட்டியாவது...?!!"


திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் மது அருந்தலாம் என்கிற அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

 இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்ட இன்றைய தமிழகத்தில் நீண்ட காலமாகவே மதுவிலக்கு அமலில் இருந்த போது 1971ல் மதுவிலக்கை தளர்த்தி தமிழகத்தில் சாராய வியாபாரத்தை தொடங்கி வைத்து மது விற்பனைக்கும், அதன் சாம்ராஜ்யத்திற்கும் பிள்ளையார் சுழி போட்ட பெருமைக்குரிய தந்தை கருணாநிதியின் வழி பின்பற்றி தற்போது "திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மது அருந்தலாம்" என்கிற வரலாற்று சிறப்புமிக்க அரசாணையை மகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு வெளியிட்டிருப்பதன் மூலம் பூரண மது விலக்கு என்பதற்கு பதிலாக "பூரண மது மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றிட முடிவு" செய்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியா.? வாய்ப்பே இல்லையென மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

;

ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவியர் ஆண், பெண் பாகுபாடின்றி இளம் வயதிலேயே மதுவிற்கு அடிமையாகி வரும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கும் போது இளம் சிறார்கள் விளையாடுகின்ற விளையாட்டு மைதானங்களிலும், குழந்தைகள், பெண்கள் என குடும்பம், குடும்பமாக கலந்து கொள்ளும் திருமண மண்டபங்களிலும் அரசின் அனுமதி பெற்று, அதற்கான கட்டணத்தை செலுத்தி மது அருந்த அனுமதிக்காலம் என்கிற தமிழக அரசின் அரசாணை என்பது இளம் தலைமுறைக்கு அரசு வைக்கின்ற சவக் கொள்ளியாக அமைந்து விடும் என்பதால் தமிழக அரசின் இச்செயலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

மேலும் கடந்த 2016ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்துவோம்" என தேர்தல் வாக்குறுதி அளித்த திமுகவிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முழுமையான ஆதரவளித்து "திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மதுக்கடைகள் எல்லாம் ஆவின் பால் கடைகளாக மாற்றுவோம்" என்கிற பிரச்சாரத்தை மேற்கொண்டோம். ஆனால் அந்த காலகட்டத்தில் வெற்றி பெறவில்லை என்றாலும் வெற்றி பெற்ற இந்த காலகட்டத்திலாவது திமுக அரசு செயல்படுத்தும் என்று பார்த்தால் ஆவினை படுபாதாளத்திற்கு வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்ல, டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனையை டாப்கியரில் கொண்டு சென்று கொண்டிருக்கும் திமுகவை ஆதரித்தற்காக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தற்போது வெட்கி தலைகுனிகிறது.

இதையும் படிங்க;- BREAKING: குடிமகன்களுக்கு குட்நியூஸ்.. திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்.!

மேலும் அப்போதைய சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் அப்போதிருந்த அதிமுக அரசுக்கு எதிராக  தொடர்ச்சியாக பூரண மது விலக்கு வேண்டும் என போராடியதும், கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் கறுப்பு சட்டை அணிந்து, வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு, வீடுகளின் முன் கறுப்புக் கொடியேற்றி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என போராடியதை நாங்கள் உட்பட தமிழக மக்கள் எவரும் அவ்வளவு எளிதாக மறந்து விடவில்லை. 

ஆனால் 2021ல் ஆட்சி மாற்றம் நடைபெற்ற திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பூரண மது விலக்கு இல்லையென்றாலும், படிப்படியாகவாவது மதுவிலக்கை அமல்படுத்துவார்கள் என நினைத்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதற்கான முகாந்திரம் தெரியவில்லை. அதுமட்டுமின்றி ஆட்சிப்  பொறுப்பிற்கு வந்தது முதல் தற்போது வரை பூரண மது விலக்கு குறித்தோ அல்லது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்தோ திமுக அரசு சிந்திக்க மறந்த நிலையில் ஆண்டுக்காண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் விற்பனை பெருகி, கோடிகளில் குவியும் வருமானத்தை பார்த்து சட்டப்பேரவையிலேயே உள்ளம் பூரித்து, தமிழக அரசு புளகாங்கிதம் அடைந்தது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் புன்முறுவல் பூத்து, புன்சிரிப்போடு கவனித்ததை காணும் போது அந்த புன்சிரிப்பில் "மக்கள் நலனாவது, மண்ணாங்கட்டியாவது...?!!" என மைண்ட் வாய்ஸில் தனக்குத் தானே பேசிக் கொண்டதை நம்மால் உணர முடிந்தது.

இளம் விதவைகள் அதிகமுள்ள, சாலை விபத்துகளால் நடக்கும் உயிரிழப்புகள், புற்றுநோய், கிட்னி செயலிழத்தல், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் ஏற்படும் மரணங்கள் என மதுவால் ஏற்படும் துர்மரணங்களால் இந்தியாவிலேயே தமிழகம் பெருமைக்குரிய (??!!!) முதல் மாநிலமாக திகழ்ந்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் ஆண், பெண் பாகுபாடின்றி சமத்துவம் மிக்க குடிமக்களாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பானது அதனை இன்னும் பன்மடங்காக பெருக்கி அரசு கஜானாவை மட்டுமல்ல சாராய ஆலை அதிபர்களின் கஜானாவையும், தனியார் மருத்துவமனை அதிபர்களின் கஜானாவையும் நிரம்பி வழியச் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சாதிப் பிரச்சினைகளில்லா சமத்துவம் மிக்க மாநிலமாக, சட்டம் ஒழுங்கில் தலைசிறந்த மாநிலமாக, அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்வதாக அடிக்கடி கூறி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுவிலக்கு உள்ள மாநிலமாக, மது விற்பனை தடை செய்யப்பட்ட மாநிலமாக, இளம் விதவைகளே இல்லாத மாநிலமாக, மது குடித்து விட்டு வாகனங்கள் இயக்குவதால் ஏற்படும் சாலை விபத்துகளால் துர் மரணங்களே இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என நெஞ்சம் நிமிர்த்தி கூறக் கூடிய நிலையை உருவாக்க நடவடிக்கை எடுப்பது தான் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவர் செய்கின்ற நன்றிக்கடனாக இருக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொண்டு திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் மது அருந்தலாம் என்கிற அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது என பொன்னுசாமி கூறியுள்ளார். 

click me!