ஏரி குளம் நிரம்பலே... அமைச்சர்! சாலைகளும் வீடும் நிரம்பிடுச்சி... மக்கள்! ஆக்கிரமிப்பு என அலறும் நீதிமன்றம்!

First Published Nov 3, 2017, 6:27 PM IST
Highlights
lakes are yet to be filled minster says and roads are filled by rain water people says


வடகிழக்குப் பருவ மழை பலத்த மழைப் பொழிவுடன் துவங்கியுள்ளது. நான்கு நாட்கள் பெய்த கன மழையில் சென்னையின் பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டின் நிகழ்வுகளைக் கண்ணால் கண்ட மக்கள், அந்த பீதியில் இருந்து இன்னும் திரும்பவில்லை. எனவே, சாதாரண மழை நீர் சேர்ந்தவுடனேயே, பேரிடர் குறித்த அச்சத்துடனே அணுகுகின்றனர். இதனால், ஏரி குளங்கள் நிரம்பிவிட்டன, எச்சரிக்கையாக இருங்கள் என்று வாட்ஸ் அப்களிலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி விட்டதாகக் கூறப்படும் வதந்திகளை நம்பாதீர்கள், இன்னும் ஏரிகள் குளங்களில் நீர் சேரவில்லை, அவை இன்னும் நிரம்பவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். 

ஆனால், ஏரி குளங்களுக்குச் சென்று சேர வேண்டிய மழை நீர் எல்லாம், பல நீர் வழித்தடங்கள் அடைபட்டுப் போய், சில காணாமல் போய்,  இன்னும் சில ஏரிகளே மாயமாகிப் போய் விட்டதால், மழை நீர் பெருமளவில் சாலைகளிலும், சாலையை ஒட்டிய வீடுகள், கடைகளிலும், பள்ளமான தெருக்களிலும் புகுந்து கொண்டது. இதனால்,  பொதுமக்கள் பெரிதும் சிரமப் பட்டனர். யாரோ சிலர் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து, நீர்நிலைகளை ஆக்கிரமித்து அநியாயம் செய்யப் போக, ஒட்டு மொத்த பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது என்று புலம்பித் தீர்க்கின்றனர். 

இந்நிலையில், சாலைகளில் மூடியுள்ள பாதாள சாக்கடை மூடிகள், சாலைகளின் ஆக்கிரமிப்புகளில் அமிழ்ந்து காணாமல் போயுள்ளன. நீர் வடியும் வடிகால் அமைப்புகள் பல, நடைபாதைகளினூடே அமைக்கப் பட்டிருக்கும். சென்னை சாலைகளில் அவையும் பல, ஆக்கிரமிப்புகளால் திறக்க வழியின்றிப் போயுள்ளன.  இத்தகைய நிலையில், ஏற்கெனவே நீதிமன்றங்களில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் வழக்குகள் பலவற்றை தாக்கல் செய்துள்ளனர். இதில் வெட்கக் கேடான விஷயம், பல அரசு அலுவலகக் கட்டடங்களும்.. அவ்வளவு ஏன்... நீதிமன்றக் கட்டடங்களும் கூட நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவையே! 

இந்நிலையில், தற்போதைய வெள்ள நிலவரமும் சேர்ந்து கொள்ள, ஆக்கிரமிப்புகள் இப்போது பேசு பொருள் ஆகியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது  குறித்த வழக்கு வந்தபோது,  ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்று தமிழக அரசு ஒப்புக்  கொண்டதும்,
 
ஆக்கிரமிப்புகள்தான் வெள்ளத்துக்கு காரணம் என்று  தமிழக அரசு அறிக்கை அளித்ததும் தான் ஹைலைட்டான விஷயமாகியிருக்கிறது. 

இதை விட ஹைலைட்டான இன்றைய விஷயம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருப்பது. தூர்வாரும் நடவடிக்கையை ஏன் முன்கூட்டியே தொடங்கவில்லை என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அமைச்சர் மணியன்  “சொன்னால் உயிர் போய்விடும்... சொல்லாவிடில் தலை போய்விடும் என்ற நிலையில் தான் நாங்கள் உள்ளோம் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில், மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய அடிமட்ட அளவில் பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கின் போது, நீதிபதி சரமாரியாக தமிழக அரசுக்கு கேள்விகளை முன்வைத்தார். அப்போது, மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பான அறிக்கை ஒன்றை அரசு தாக்கல் செய்தது. மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளநீரை அகற்ற 458 மின்மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மழை பாதிப்புகளை முதல்வர் தலைமையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் என கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில், மக்களுக்காக தெரிவிக்கப்பட்ட  உதவி எண்கள் குறித்தும் குறிப்பிடப் பட்டிருந்தது. 

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நீதிமன்றத்தில் கூறியபோது, “எவ்வளவோ முயன்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை. தூர் வாரியதில் 5 ஆயிரம் டன் கழிவுகள் அகற்றப் பட்டன. நீர் நிலைகளுக்கான கரையை நிர்ணயித்து ஒதுக்கினால், உடனடியாக ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யபட்ட 3 ரொபோடிக் இயந்திரங்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளன” என்றார்.

இதை அடுத்து, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம், மழை பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் விரிவான அறிக்கையை  நவம்பர் 10  ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மழை பாதிப்பு தொடர்பாக அரசு அளித்த 1913 என்ற உதவி எண் வேலை செய்கிறதா என்பதை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சோதித்து உறுதிப்படுத்தினார்.  அதேநேரம், அரசு தலைமை வழக்கறிஞர் அரசின் உடனடி செயல்பாடுகளைக் குறித்துச் சொன்னபோது, தாமும் சாந்தோம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றப்படுவதை காலையில் பார்த்ததாக  தலைமை  நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

ஏற்கெனவே 2015 டிச.1 ம் தேதி வெள்ளமும் கூட, ஆக்கிரமிப்புகளின் கோரப்பிடியினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கே. அந்த வெள்ளம் வடிந்து, அடுத்த சில மாதங்களில் வெயிலின் கொடுமையில் சென்னையில் வறட்சி ஏற்பட்டது. தண்ணீருக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டது. 2016ல் மழை பெரிதும் ஏமாற்றினாலும், ஒரே ஒரு நாளில் வந்த வார்தா புயல் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது.  தொடர்ந்து மரங்கள் சாய்ந்ததால், மேலும் வறட்சி தலை தூக்கியது. இந்நிலையில் இப்போது பெய்து வரும் மழையை சேமித்து, வெயிற்காலங்களில் முறையாக திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும் என்பதுதான், சென்னைவாசிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. இதனை அரசும் உணர வேண்டும். 

click me!