ஆன்மீக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் ஆதரவைத் திரட்டுகிற முயற்சியில் மோடி படுதோல்வி அடைவார்- கே.எஸ்.அழகிரி

By Ajmal KhanFirst Published Jan 19, 2024, 3:18 PM IST
Highlights

தமிழக மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக வஞ்சித்து வருகிற பிரதமர் மோடியின் ஆன்மீக சுற்றுப் பயணத்தின் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ள கே எஸ் அழகிரி, தமிழகம் என்றைக்குமே பா.ஜ.க. எதிர்ப்பு பூமியாகவே இருக்கும் என கூறியுள்ளார். 

மக்களை ஏமாற்றும் மோடி- கே.எஸ். அழகிரி

பிரதமர் மோடியின் தமிழக பயணம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014 மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி அரசு ஒன்பதரை ஆண்டுகாலமாக மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.  இவற்றையெல்லாம் மூடி மறைப்பதற்கு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் கும்பாபிஷேகத்தை தன்னை மையப்படுத்தி நிகழ்த்துவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். இதன்மூலம் 2024 மக்களவை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முனைப்புக் காட்டுகிறார். 

ஆயோத்திக்கு 85ஆயிரம் கோடி நிதி

நிறைவடையாத ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதை நான்கு சங்கராச்சாரியார்கள் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அலட்சியப் போக்குடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். அயோத்தியை ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. சர்வதேச விமான நிலையம் அமைக்க ரூபாய் 1450 கோடி, நவீன ரயில் நிலையம் அமைக்க ரூபாய் 240 கோடி, துணை நகரம் அமைக்க ரூபாய் 2180 கோடி, குடியிருப்பு திட்டங்களுக்காக ரூபாய் 300 கோடி என ரூபாய் 11,000 கோடி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். 2030 ஆம் ஆண்டிற்குள் அயோத்தி நகர வளர்ச்சிக்காக மொத்தம் ரூபாய் 85,000 கோடி செலவு செய்ய மோடி அரசுத் திட்டங்களைத் தீட்டியிருக்கிறது. 

மசூதி கட்டாத மத்திய அரசு

ஆனால், அதேநேரத்தில் அயோத்தியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாற்று மசூதி கட்டுவதற்கான முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.  முஸ்லிம் அமைப்புகள் தொடங்கிய அறக்கட்டளையில் ரூபாய் 45 லட்சம் தான் நிதி சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ராம ஜென்ம பூமி அறக்கட்டளையில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூபாய் 900 கோடி செலவிடப்பட்டு, இன்னும் வங்கி கணக்கில் ரூபாய் 3000 கோடி டெபாசிட் இருக்கிறது. இந்த நிதி சேகரிப்பில் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. எந்த உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டவும், மாற்று இடத்தில் மசூதி கட்டவும் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்ததோ, 

அரசியல் ஆதாயத்திற்காக ஆன்மிக பயணம்

இதை முற்றிலும் புறக்கணித்து ஒன்றிய பா.ஜ.க. அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. அரசமைப்புச் சட்டப்படி மதச்சார்பற்ற அரசு அனைத்து மதங்களையும் சமநிலையில் கருத வேண்டுமே தவிர, பாரபட்சமாக நிதி திரட்டி செலவு செய்வது மிகுந்த கண்டனத்திற்குரியது. மதச்சார்பற்ற கொள்கை என்பது அரசுக்கு மதம் இல்லையே தவிர, மதங்களுக்கு எதிரானது அல்ல. ஒரு கண்ணிற்கு வெண்ணெய்யும், ஒரு கண்ணிற்கு சுண்ணாம்பும் வைப்பது போல ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சென்னை மாநகரில் கேலோ இளைஞர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று வருகை புரிகிறார். ஆனால், அதேநேரத்தில் ஸ்ரீரங்கம், இராமநாதபுரம் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு அரசியல் ஆதாயத்தோடு மோடி செயல்பட்டு வருவது வெளிப்படையாகத் தெரிகிறது. 

தமிழக மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக வஞ்சித்து வருகிற பிரதமர் மோடியின் ஆன்மீக சுற்றுப் பயணத்தின் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள்.  தமிழகம் என்றைக்குமே பா.ஜ.க. எதிர்ப்பு பூமியாகவே இருந்து வருகிறது.  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்த மக்களவை உறுப்பினர்கள் ரூபாய் 37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரியிருந்தார்கள். ஆனால், இதுவரை எந்த நிதியும் ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, நிதியும் தர முடியாது என்று ஆணவத்தோடு பேசியதை அனைவரும் அறிவார்கள்.  2014 முதல் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சப் போக்குடன் செயல்பட்டு வருவதை நிதி ஆயோக் தலைமை நிர்வாக அலுவலர் பி.வி.ஆர். சுப்பிரமணியமே உறுதி செய்து, ஒன்றிய அரசு நிதி அதிகாரங்களைக் குவித்துக் கொண்டு வருவதாகக் கருத்து கூறியிருக்கிறார்.

மோடி படுதோல்வி அடைவார்

14-வது நிதிக்குழு மத்திய நிதி தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு 42 சதவிகிதம் நிதி ஒதுக்க வேண்டுமென்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால், மோடி அரசு அதை 33 சதவிகிதமாக குறைக்க முயற்சி செய்தது. ஆனால், அதை அன்றைய நிதிக்குழு தலைவர் ஒய்.வி. ரெட்டி ஏற்றுக் கொள்ள மறுத்ததை இன்றைக்கு பி.வி.ஆர். சுப்பிரமணியம் அம்பலப்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் கூட்டாட்சித் தத்துவம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன பதிலைக் கூறப் போகிறார் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே, தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக மக்கள் மிகுந்த கொந்தளிப்பான நிலையில் இருக்கிறார்கள். இதை மூடி மறைக்கிற வகையில்,  ஆன்மீக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் ஆதரவைத் திரட்டுகிற முயற்சியில் பிரதமர் மோடி படுதோல்வி அடைவது உறுதி என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

தொடங்கியது நாடாளுமன்ற தேர்தல் 2024 பணி! பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம் -இந்தியா வெல்லும்! மு.க.ஸ்டாலின்
 

click me!