உடனேலாம் சரிசெய்ய முடியாது.. அமைச்சரின் அலட்சிய பதிலால் ஆத்திரமடைந்த மக்கள்..! கொடுங்கையூரில் பரபரப்பு..!

First Published Nov 2, 2017, 1:11 PM IST
Highlights
kodungaiyur people argue with minister jayakumar


10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்களை உடனடியாக பார்த்து சீரமைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதால் அவருடன் கொடுங்கையூர் பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பருவமழை தொடங்கியவுடனே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. நேற்றிரவு முதல் மழை பெய்யாததால் பல இடங்களில் தண்ணீர் வடிந்து இயல்புநிலை திரும்புகிறது.

எனினும் கொரட்டூர், முடிச்சூர், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னை கொடுங்கையூரில் நேற்று மழைநீரில் விளையாடிக்கொண்டிருந்த யுவஸ்ரீ, பாவனா என்ற இரண்டு சிறுமிகள், அப்பகுதியில் மின்பெட்டியில் இருந்து அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கிப் பலியானார்கள். 

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டதாகக் கூறிய அரசுக்கு எதிரான கண்டனக் குரல்களும் வலுத்தன.

இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக கொடுங்கையூர் பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து 3 மின்வாரிய அதிகாரிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 8 பேரை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அதிரடியாக பணியிடைநீக்கம் செய்தார்.

மேலும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி அறிவித்ததோடு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமிகளின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வர் பழனிசாமி, சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி அறிவித்தார்.

இந்நிலையில், சிறுமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமார் இன்று கொடுங்கையூர் சென்றார். சிறுமிகளின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஜெயக்குமாரிடம், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்த்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். 

அதற்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்களை உடனடியாக பார்த்து சீரமைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்ததால், ஆத்திரமடைந்த மக்கள், அமைச்சருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிறுமிகளின் உயிரிழப்புக்கு மின்வாரியத்தின் கவனக்குறைவுதான் காரணம். இதை எந்தவிதத்திலும் ஏற்கவோ, மன்னிக்கோ முடியாது. யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்கம் தவறுகளை தடுக்கும் என்று கூறினார்.
 

click me!