ஓ பி ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் நடவடிக்கைக எடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜெயக்குமார், ஓபிஎஸ்யின் மகன் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
தீரன் சின்னமலையின் நினைவு தினம்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் முழு உருவ சிலைக்கும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், இன்றைய தினம் மாவீரன் தீரன் சின்னமலையின் உடைய நினைவு நாள் ஆகையால் அவருக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்துவதாகவும், வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தவர் தீரன் சின்னமலை எனவும் தெரிவித்தார்.
ஓபி ரவிந்திரநாத் மீது பாலியல் புகார்
சட்ட ஒழுங்கு சீர்கேடுகளால் மக்கள் அவதிப்படுவதாகவும், திமுக எம்எல்ஏக்கள் மக்கள் பணியில் ஈடுபடவில்லை எனவும் விலைவாசி உயர்வு, தக்காளி விலை உயர்வால் மக்கள் துன்பப்படுவதாகும் இதனை எல்லாம் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார். தங்கம் விலை தான் தினசரி மாற்றம் ஏற்படும், தற்பொழுது தினமும் தக்காளி விலையையும் டிவியில் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மக்களவை உறுப்பினர் ஒ பி ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், பெண் கொடுத்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் இன் மகன் என்பதால் பாரபட்சம் காட்டாமல் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பாஜக கூட்டணியில் அதிமுக தொடருமா.?
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த ஜெயக்குமார். அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார். நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் எது வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணிக்கு வந்தால் அதிமுக ஏற்றுக்கொள்ளுமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அந்த சூழல் வருகின்றபோது அது குறித்து அதிமுக ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று கூறினார். மேலும் அதிமுக கொடியை ஓபிஎஸ் அணியினர் பயனபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார்.
கடலில் பேனா சின்னம்
கடலில் பேனா சிலை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாக தவறான தகவலை திமுக அரசு மக்களிடம் தெரிவித்து வருவதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் உயர் நீதிமன்றம் அல்லது பசுமை தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவலை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.