அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது டாஸ்மாக் சூப்பர்வைசர் வீடு மற்றும் கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜியை நெருக்கும் அமலாக்கத்துறை
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை கைது செய்த போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் தற்போது புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். அடுத்த கட்டமாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
திமுக நிர்வாகி வீட்டில் சோதனை
இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக (தெற்கு) ஒன்றியச் செயலாளர் வீரா.சாமிநாதன். வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. வீரா.சாமிநாதன் வீடு வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ளது. நேற்று மாலை வேடசந்தூர் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு சாமிநாதனின் வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனையானது இன்று காலை நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் அம்பாள் நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் கரூர், செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள கிரானைட் கடை உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, கரூரில் மீண்டும் சோதனை
இதே போல கோவை இராமநாதபுரம் பகுதியில் டாஸ்மார்க் சூப்பர்வைசர் முத்துபாலன் வீட்டிற்குள் புகுந்த அமலாக்கதுறை துப்பாக்கி ஏந்திய 10க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்பு உடன் சோதனை செய்து வருகின்றனர். கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிதாக கட்டி வரும் வீட்டை கோவையைச் சேர்ந்த அருண் அசோசியேட் என்ற நிறுவனம் கட்டி வருகிறது. இந்நிலையில் கோவை திருச்சி சாலையில் நாடார் காலனியில் உள்ள அருண் அசோசியேட் அலுவலகத்தில் இன்று அமலாக்க துறை சோதனை செய்து வீடு கட்ட மொத்த மதிப்பீடு, அமைச்சர் கொடுத்த பணம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள்