சட்டமன்றத்துக்குள் பா.ஜ.க நுழைய அதிமுக தான் காரணம் என தெரிவித்த ஜெயக்குமார், எங்கள்.கூட்டணியில் இருப்பதால் தான் பாஜ.க வுக்கு அடையாளம் உள்ளதாகவும் கூறினார். இதே போக்கு தொடர்ந்தால் பா.ஜ.க உடன் கூட்டணி தொடர்வது குறித்து பரிசீலிக்கும் சூழல் வரும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலை
திமுக நிர்வாகிகள் தொடர்பான ஊழல் பட்டியலை ஏற்கனவே அண்ணாமலை வெளியிட்ட நிலையில், திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியலையும் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில நாளேடுக்கு பேட்டி கொடுத்த அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் ஊழல் நடந்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் அண்ணாமலை கருத்திற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அண்ணாமலை நாவடக்கம் இல்லாமல் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்காமல் தோழமை உணர்வு இல்லாமல் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை விமர்சிப்பதற்கு பதில் மறைந்த அதிமுக தலைவர் குறித்து பேசி இருக்கிறார். இன்றும் எங்கள் இதயத்தில் இருப்பவர் ஜெயலலிதா, அவர்களை முன்னாள் இன்னாள் பிரதமர்கள் அவர்களது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
அண்ணாமலைக்கு தகுதி இல்லை
அண்ணாமலைக்கு வரலாறு தெரியாமல் கத்துக்குட்டி போல பேசுகிறார். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது. ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது கண்டனத்துக்குரியது. இதற்கு முன்னர் தமிழகத்தில் பா.ஜ.க தலைவர்கள் இருந்த காலத்தில் தோழமை உணர்வு இருந்தது. ஆனால் அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுகிறார். அண்ணாமலையை அமித்ஷா, ஜே பி நட்டா கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல் முருகனுக்கு மாநில தலைவருக்கான தகுதி இருந்தது. ஆனால் அண்ணாமலைக்கு தகுதி இல்லையென கூறினார். மோடி மீண்டும் பிரதமராக வர கூடாது என்ற நோக்கத்தில் அண்ணாமலை செயல்படுவது போல் உள்ளதாகவும் விமர்சித்தார்.
கூட்டணி குறித்து யோசிக்க வேண்டிய நிலை வரும்
தமிழகத்தில் 20 வருடத்துக்கு பின் சட்டமன்றத்துக்குள் பா.ஜ.க நுழைய அதிமுக தான் காரணம் என தெரிவித்தவர், எங்கள்.கூட்டணியில் இருப்பதால் தான் பாஜ.க வுக்கு அடையாளம் உள்ளதாகவும் கூறினார். இதே போக்கு தொடர்ந்தால் பா.ஜ.க உடன் கூட்டணி தொடர்வது குறித்து பரிசீலிக்கும் சூழல் வரும் என எச்சரித்தார். கூட்டணி இல்லை என்றால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை, ஆனால் தேசிய தலைமை அதிமுகவுடனான கூட்டணியை விரும்புகிறது, அண்ணாமலை பேச்சு அப்படி இல்லை. அண்ணாமலை இனி பேசுவதை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் வாங்கிக்கட்டி கொள்வார் என ஜெயக்குமார் ஆவேசமாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்