கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறக்க ஏற்கனவே 5 ஆம் தேதியை குடியரசு தலைவர் நேரம் ஒதுக்கியிருந்த நிலையில் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை வருகிற 15ஆம் தேதி திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிண்டி பல்நோக்கு மருத்துவமனை
கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை கட்ட திமுக அரசு பதவியேற்றதும் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறக்க முடிவு செய்யப்பட்டது.
மருத்துவமனையை திறக்கும் முதலமைச்சர்
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்தார். குடியரசு தலைவரும் வருவதாக ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் குடியரசு தலைவர் 4 ஆம் தேதி செர்பிய நாட்டிற்கு சென்றதால் 5 ஆம் தேதி கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவரின் தேதியைப் பெற்று ஜூன் 15-ஆம் தேதி மருத்துவமனையைத் திறக்க தமிழக அரசு சாா்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து இதுவரை மருத்துவமனை திறக்கும் நிகழ்ச்சிக்கு தேதி ஒதுக்கப்படவில்லையென தகவல் வெளியானது.
நேரம் ஓதுக்காதது ஏன்.?
ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் கூறுகையில் அடுத்த வாரம் தெலுங்கானா மாநில பயணம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதன் காரணமாக குடியரசு தலைவர் வருகை மீண்டும் ரத்தாகியுள்ளதால் கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசோடு திமுக மோதல் போக்கில் ஈடுபட்டுவருவதால் குடியரசு தலைவர் மருத்துவமனையை திறந்து வைக்க நேரம் ஒதுக்கவில்லையென அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
மோடி மீது அமித்ஷவிற்கு என்ன கோபம்? எல்.முருகன், தமிழிசை பிரதமராக வாய்ப்பு... மு.க.ஸ்டாலின்